Sunday, October 16, 2011

சிலிர்க்கும் சிம்லா


மறுநாள் சிம்லா நோக்கி பதினான்கு மணி நேரப்பயணம். பயணக்குழுவினரின் பயனான பகிர்வுனால் அலுப்பே இல்லாமல் பயணித்தோம். நம் நாட்டில் உள்ள கெந்திங், கேமரன் மலைகளை விட மிகவும் அபாயமான வளைவுகளையும், பாதையையும் கொண்டிருந்தது சிம்லா. மலைச்சரிவில் பிரமாண்டமான மாளிகைகளைப் பார்க்கும் போது ரசிக்க முடியவில்லை. உதறல்தான் எடுத்தது. பொதுவாக மலைப்பாதைகளில் செல்லும் போது, தலைசுற்றல், வாந்தி ஏற்படுவது வழக்கம். ஆனால் இப்பயணத்தில், யாருக்கும் தலைச் சுற்றலோ, வாந்தியோ வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்சிம்லா செல்லும் வழி நெடுக, பயணக் குழுவினர் கலகலப்பாக பயணித்ததால் அவர்கள் கவனம் முழுதும் அதிலே திசை திருப்பப்பட்டதுதான் இதற்கு முக்கியக் காரணம். சங்கத்தின் செயலாளர் திரு.குணநாதன், பொருளாளர் திரு.ராஜன் இருவரும் மிகவும் கலகலப்பாகவும், சிறப்பாகவும் பேருந்து பயண நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
திரு.குணநாதன் அவ்வப்போது விழிப்புணர்ச்சிப் பாடலானநீ நினைத்தால் எந்நேரத்திலும் ஏதேதோ நடக்கும்என்று ஆடிப் பாடி அனைவருக்கும் கலகலப்பு ஊட்டினார். அவ்வப்போது போட்டிகளையும் நடத்தியது இன்னும் கலகலப்பைக் கூட்டியது. பயண ஆரம்பத்திலே தம் அறைநண்பரைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும். அதற்குப் பரிசும் உண்டு என்று திரு. ராஜன் சொல்லிவிட்டார். எனவே, எல்லோரும் மிகவும் ஆர்வமாக தம் அறைத்தோழர்களை கண்காணிக்க ஆரம்பித்து விட்டனர். எழுதியக் கவிதைகள் அவ்வப்போது பேருந்துப் பயணத்தில் வாசிக்கப்பட்டன.
என்னோடு பயணம் செய்த பிற இலக்கிய ஆர்வலர்களின் சிறப்பைப் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவர்களில் குறிப்பாக, முதன் முறையாக எங்களுடன் பயணித்தநயனம்வார இதழ் ஆசிரியர் திரு.இராஜகுமாரன். மிகவும் தன்மையானவர் என்பதை நேரில் கண்டேன். ஒரு குழந்தையைப் போல் மிகவும் குதூகலமாகப் பயணித்தார். நல்ல இனிமையானக் குரலில் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். அவ்வப்போது நல்ல பல கருத்துகளை வெளிப்படுத்திய வண்ணம் வந்தார். வயதைப் பற்றியோ, உடல்நிலைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் எல்லா இடங்களுக்கும் உற்சாகத்துடன் வந்தார். சிம்லாவிலிருந்து புது தில்லி திரும்பும் வழியில் ஓரிடத்தில்சாக்லெட்வாங்கி என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளும் பொருட்டு அனைவருக்கும் வழங்கினேன். அவர் சிறு குழந்தையைப்போல் என்னிடம் கேட்டு வாங்கி சாப்பிட்டது இன்னும் நெஞ்சில் இனிக்கிறது(சாக்லட் வழங்கியதற்காக சிலர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது வேறு விசயம்).
அடுத்து தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் கண்காணிப்பாளர் திரு.ஆர். தியாகராஜன் அவர்களும் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர். செம்மொழி மாநாட்டின் போதுதான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. ஆக்ரா கோட்டைக்குச் சென்ற போது விற்பனை முகவர்களின் தொந்தரவு தாங்கமுடியாமல் மிகவும் அவதிப்பட்டேன். மாணவர்கள் ஆயிற்றே என்று பரிதாபப்பட்டு பொருட்கள் வாங்கியதுதான் என் தவறு. தேனீக்கள் மாதிரி மொய்த்து விட்டனர். அவர்களிடமிருந்துஎன் தங்கைதான் இவர். நாங்கள் ஏற்கனவே பொருட்கள் வாங்கி விட்டோம்என்று தம் கையிலிருந்தப் பொருட்களை அவர்களிடம் காட்டி என்னைக் காப்பாற்றினார். இன்றுவரை அவ்வப்போது நல்ல நல்ல ஆலோசனைகள் எனக்கு வழங்கி வருகிறார். பேருந்துப் பயணத்தின் போது சங்கத் தலைவரைப் பற்றி கவிதை எழுதியுள்ளேன் என்று கூறியப் பொழுது எல்லோர் முன்பும் வாசிக்கச் சொல்லி ஆர்வமூட்டினார்.
அடுத்து, ஈப்போ திரு.இரா.மாணிக்கம் ஆசிரியர் அவர்களின் இலக்கியம், கல்வி, சமூகம் போன்றவற்றில் உள்ள ஈடுபாட்டை கண்டு வியந்திருக்கிறேன். அவரின் குணநலன்கள் பற்றி அவர் மனைவி திருமதி. தவமணி விவரித்தபோது திரு.மாணிக்கம் மட்டும் கண் கலங்கவில்லை. நானும்தான்! ஒரு சீரியக் கணவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி விளங்கிக் கொண்டிருக்கிறார். மெழுகுவர்த்திக்கு உதாரணம் திரு.இரா.மாணிக்கம் என்றால் மிகையில்லை.
ஆங்கிலத்தில் “Give and Take Policy” என்பார்கள். அப்படிப்பட்ட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைக்கு உரியவர் கேமரன் மலையைச் சார்ந்தச் சமூக சேவையாளர் திரு.கோபாலன். ஒரு சில சம்பவங்களில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்தன. நானாக இருந்தால்கூட முகம் சுளித்திருப்பேன். ஆனால், எதற்கும் சலித்துக் கொள்ளாமல், முகம் சுளிக்காமல் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் கொண்ட இத்தகைய மனிதரை முதன் முதலாகப் பார்த்தேன். அவரிடமிருந்து அந்த நல்ல குணத்தை நானும் கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆங்கிலத்தில் சொன்னால், “He is Great!”
இவர் சகஜமாகப் பழகுவாறா? என்றக் கேள்விக்குச் சொந்தக்காரார் தொலைக்காட்சி தமிழ்ச்செய்திப் பிரிவுத் தலைவர் திரு..பார்த்தசாரதி. நீண்ட நாட்கள் அறிமுகம். ஆனால், மரியாதை நிமித்தமாகதான் பேசுவோம். இந்தப் பயணம் பதவி, உயர்நிலை அதிகாரிகள் என்பதை மறந்து அனைவரும் ஒரே குடும்பமாய் இணைந்திருக்க உதவியது என்பதுதான் உண்மை! ஒரு தந்தையைப் போல் மிகுந்த அக்கறையுடன் என்னுடன் பேசினார். எங்களின் குதூகலம் அவரையும் பற்றிக் கொண்டது. உற்சாகமாகப் பாடல்களும் பாடினார். அமைதியான, அன்பான மனிதர்!
அடுத்து, முனைவர் வே.சபாபதி அவர்கள். பல தடவை பார்த்திருந்தாலும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அவருடன் பேசும் முன் ஒரு தயக்கம் இருந்தது. பேசிய பின், சுத்தமாக மறைந்து விட்டது. மிகவும் இயல்பாகக் பழகக்கூடியவர். மென்மையானவர்!
புவனேஸ்வரன்! பத்திரிக்கைத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் பரிச்சயமானப் பெயர். ஆம்! மக்கள் ஓசையின் புகைப்படக்காரர், நிருபர். பயணம் ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை சளைக்காமல் அனைவரையும் படம் பிடித்தார். புகைப்படம் எடுத்தே ஓய்ந்தும் போய்விட்டார். முகம் சுளிக்காத, இன்னொரு அன்பான நண்பன் இவர். “நண்பேண்டாஎன்றால் இவருக்கும் பொருந்தும்!
அடுத்து என்னுடன் பயணித்த அறுவரை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால், இப்பயணம் தொடங்கி முடியும் வரை நான் வலம் வந்தது அவர்களுடந்தான். இவர்களின் அறிமுகம் முடிந்தபின் மீண்டும் பயணத்தைத் தொடர்கிறேன்.!
கெடா, சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்ப்பிரிவுத் தலைவர் திரு. பன்னீர்செல்வன் அந்தோணி; மலேசிய தேர்வு வாரிய உதவி இயக்குனர் திரு.சேகரன்; துவாங்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. மணியரசன், தலைமையாசிரியர் திரு.கலைச் செல்வம்; இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு.முருகையா; தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி. ஆதிலட்சுமி.
இவர்களில் திரு.முருகையா, திருமதி. ஆதிலட்சுமி ஆகிய இருவரும், மலேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குனர் திரு. பி.எம்.மூர்த்தி அவர்களின் உடன்பிறப்புக்களாவர். நான் இப்பயணத்தில் இடம் பெற திரு. பி.எம்.மூர்த்தி அவர்களும் ஒரு காரணம். கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்கள் வட இந்தியா இலக்கியப் பயணம் குறித்து சொன்னார். நான் வருகிறேன் என்று கூறினேன். அதன் பிறகு வேலை பளுவால் சுத்தமாக மறந்து விட்டேன். இந்த வருடம் பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் திரு. பி.எம்.மூர்த்தியிடமிருந்து ஒரு குறுந்தகவல். “பயணத்தில் கலந்து கொள்கிறீர்களா சகோதரி?”என்று. பொதுவாக நான் பெரிதும் மதிக்க கூடிய நபர்களில் திரு. பி.எம்.மூர்த்தியும் ஒருவர். அவர் ஏதும் சொன்னால் நான் எப்போதும் மறுப்பு சொல்வதே இல்லை. மறுகணமே யோசிக்காமல் சரி என்று கூறிவிட்டேன். அவர் மட்டும் நினைவுக் கூர்ந்து என்னை கேட்காமல் இருந்திருந்தால் ஓர் அரும் வாய்ப்பை நிச்சயம் இழந்திருப்பேன். அவ்வகையில் அவருக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
அந்த உற்சாகத்தில் கல்வி ஆணையக் குழுவினர், ஆசிரியர்களுடன் என் பயணத்தை இணைத்துக் கொண்டேன். பயணத்தின் போது திரு.பன்னீர் செல்வன், திரு.சேகரன், திரு. மணியரசன் ஆகியோர் கல்வித்துறை தொடர்பாக மிகவும் பயனுள்ள கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர். அனைவரும் மிகவும் ஆர்வமுடன் செவிமடுத்தனர். அதோடு மிகவும் சிறப்பாகவும் பாடினர். திரு.சேகரன்தேவன் கோயில் மணியோசைஉட்பட நல்ல பாடல்களை காதுக்கு இனிமையாக வழங்கினார். திரு.மணியரசன்கண்போன போக்கிலே கால் போகலாமாஎன்று கலக்கி விட்டார். “மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமாஎன்று மிகவும் அருமையாகப் பாடி அப்பாடல் தம்மைப் பக்குவப்படுத்திய விதத்தையும் மிகவும் அழகாய் விவரித்தார் திரு.பன்னீர் செல்வன்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, “பூங்காற்றுத் திரும்புமாபாடலை நாம் பாடலாம் என்றார். ‘குளிரினால் குரல் வளம் சரியாக இல்லைஎன்றேன். “பரவாயில்லை நமக்குள்தானே பாடப்போகிறோம்என்று என்னையும் பாட வைத்தார். அந்தப் பாடலை எங்களுடன் வந்த திரு.சைமன் அவர்கள் மறுநாளும் எங்களைப் பாடும்படிக் கேட்டுக் கொண்டார். திரு.பன்னீர் செல்வன் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான விசயம். புதுதில்லி தமிழ்சங்கத்தில் கட்டுரை படைக்கும் முன், தாம் படைக்கப் போகும் கட்டுரையைப் பற்றி விவரித்து விட்டு, அவர் விரிவுரையாளர் என்ற பழக்கத்தோசத்தால்இதைப்பற்றி உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்என்று கூறிவிட்டார். அது எத்தனைப் பேர்களுக்குப் புரிந்ததோ தெரியவில்லை. நானும், திருமதி. ஆதிலட்சுமியும் சிரித்து விட்டோம். அவரும் அதை உணர்ந்து சிரித்து விட்டார். பாவம், பயணம் முழுதும் இதைச் சொல்லி சொல்லியே அவரைக் கலாட்டா செய்து விட்டோம்.
நல்லதொரு அறைத்தோழியாகக் எனக்குக் கிடைத்தார் திருமதி. ஆதிலட்சுமி. மிகவும் வெளிப்படையானவர். அனைவரின் படைப்புகள், பேச்சுகளையும் இரசித்துக் கேட்டார். பயணத்தின் போது பி.சுசிலா அவர்களின் பாடல் புத்தகத்தை கையில் எடுத்து நானும் பாடப்போகிறேன் என்று ஒவ்வொரு பாடலாகத் தேடி புத்தகத்தைப் புரட்டி முடிக்கும் முன் பயணமும் முடிந்து விட்டது. பாவம் அவர் பாடவும் இல்லை! அமைதிக்கு மறு பெயர் திரு.முருகையா. பெரும்பாலும் அவர் இருக்கும் இடமே தெரியாது. ஆனால், அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்ன போது, மைக்கை கேட்டு வாங்கும் அளவுக்கு சளைக்காமல் பேசினார்.
அடுத்து தலைமையாசிரியர் திரு. கலைச்செல்வம். 14-ம் தேதி அவருடைய பிறந்தநாள். ஜெய்ப்பூரிலே “Pizza” அல்லது “Mac D” வாங்கி தருவதாகக் சொன்னார். கடைசியில் சண்டிகார் அருகே நான்தான் எங்கள் குழுவினருக்கு “Pizza” வாங்கிக் கொடுத்தேன். அவருடன் பயணித்தபோது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அக்பர் மாளிகையைப் பார்த்து விட்டு அனைவரும் பேருந்துக்குத் திரும்பினோம். நாங்கள் இருவரும் வெகுசுவாரஸ்யமாய் கதைப்பேசிக் கொண்டு வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல், எங்களுக்கு முன்னே சென்றவர்களைப் பின் தொடர்ந்தோம். வெகு அருகாமையில் சென்றுதான் பார்த்தோம் எங்கள் நண்பர்கள் சென்றது பேருந்துக்கு அல்ல; கழிவறைக்கு! அன்று முழுவதும் நாங்கள் வாய் விட்டு சிரிக்க இந்த சம்பவம் உதவியது.
அடுத்து திரு.மணியரசன். அவ்வப்பொழுது எதையாவது சொல்லி என்னைக் கிண்டல் பண்ணிய வண்ணம் இருக்கும் அருமையான தோழர். விதவிதமாக புகைப்படங்கள் எடுப்பதில் அவருக்கு மிகவும் விருப்பம். தாஜ்மாஹால் சென்று திரும்புகையில் அனைவரும் பேருந்துக்குச் சென்று விட்டனர். நாங்கள் இருவரும் ஒரு சில பொருட்கள் வாங்கி விட்டு வந்ததால் தாமதமாகிவிட்டது. எனவே இருவரும் சைக்கிள் ரிக்சா ஏறினோம். அந்த வண்டிக்காரரோ காற்றடித்தால் பறந்து விடுவதைப் போல் தோற்றம் கொண்டிருந்தார். பாதையோ சற்று மேடு பள்ளமாக இருந்தது. மேட்டுப் பகுதி வரும்போதேல்லாம் மிகவும் சிரமப்பட்டு இறங்கித் தள்ளியபடி வந்தார் ரிக்சாகாரர். எங்களுக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. இறங்கிடலாம் என்று நினைத்தபோதுஇல்லை நீங்கள் உட்காருங்கள்’, என்று சொல்லிவிட்டு திரு.மணியரசன் நடந்து வந்தார். அவரின் இரக்க குணம் அங்கே அழகாய் மிளிர்ந்தது
சரி! மேலும் சிலரைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். இனி பயணத்திற்குச் செல்வோம்! சிம்லாவைத் தொட்டபோது உறைய வைக்கும் குளிர். முதல்நாள் சிம்லா விட்டு எப்பொழுது திரும்புவோம் என்ற நிலைக்கு உந்தப்பட்டேன். சிம்லா குளிர் பிரதேசம் ஆனால், தங்கும் விடுதியில் காலையும், மாலையும் 7 முதல் 8 மணி வரை தான் சுடுநீர் திறந்து விடப்பட்டது. அதுவும் சரியாக வரவில்லை. நீரில் கையை வைத்தாலே உறைந்து விடுவது போல் இருந்தது. அங்குதான் எனக்கு ஆரம்பித்தது என் கண் பிரச்சனை. முகம் கழுவும் சவர்க்காரம் போட்டு விட்டு நீரை தொட்டுத் தொட்டுக் கழுவியாதால் அந்த நுரை என் வலக்கண்ணில் புகுந்து சிவந்து விட்டது. குளிரின் தாக்கம், சுடுநீர் இல்லாத எரிச்சலில் என் கண்களை நன்றாக தேய்த்து விட்டேன். அதுவோ கண்வலிப் போல் சிவந்து என்னை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது. குளிரின் தாக்கத்தால் எப்போது போர்வைக்குள் சென்று அடைக்கலம் ஆவோம் என்ற எண்ணம்தான் மேலோங்கியது.
அன்றைய இரவு சண்டிகார் தமிழ்சங்கத்துடன் ஒரு சந்திப்பு இருந்தது. ஆனால், அவர்கள் அலுவல் காரணமாக வர இயலாது போய்விட்டது. அன்று இரவு நம் நாட்டு உணவானசாடின் பிரட்டல்செய்யப்பட்டது. எங்களுடன் வந்தசுடர்மதிஎன்பவர் சமையல்காரருக்கு சமைக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். அந்தக் குளிருக்கு சற்று காரமான உணவு இதமாக இருந்தது.
இவ்விடத்தில்சுடர்மதிஅவர்களைப் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். பார்க்க கறாராகத் தெரிவார். ஆனால், உண்மையிலே மிகவும் இளகிய மனம் கொண்டவர். அவர் எனக்கு அறிமுகமான நாள் முதலாக மல்லிகைப்பூ இல்லாமல் பார்த்ததில்லை. பிரிக்க முடியாதது என்னவென்றால் அது சுடர்மதியும், மல்லிகைப்பூவும்தான். வட மாநிலங்களில் மல்லிகைப்பூ இல்லாமல் மிகவும் சிரமப்பட்டார். புது தில்லி கிளம்பும் போதுஏர் ஆசியாவிமானத்தில் இவர் மல்லிகையின் வாசம் பரவாலாக வீசியது. சிலருக்கு பிடித்திருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. இதனால் திரு.சேகரனுக்கு தலைவலி கண்டு மாத்திரைப் போடும் அளவிற்கு ஆகிவிட்டது.
மறுநாள், குதிரை சவாரி வழியாக மலையுச்சிக்கு சென்று அங்கு வெண்ணிற பனியால் படர்ந்திருந்த இமயவரம்பின் அழகை அள்ளியள்ளி பருகும் வாய்ப்பும் கிடைத்தது. குதிரைச் சென்ற பாதையைப் பார்க்கும் போதே பீதிக் கிளம்பியது. எங்கே, திசை மாறிப் பள்ளத்துக்குப் போய் விடுமோ என்ற அச்சத்தில் மலை உச்சி வரை அதன் மேல் சவாரி வந்தேன். குளிர்ந்த காற்று உடலை மெலிதாகத் தழுவியபடியே இருந்தது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றதுஎன்றப் பாடலை முணுமுணுத்தபடியே குதிரை சவாரி செய்தது சுகமான அனுபவமாக இருந்தது. “Shooting Point” என்று பெயர் கொண்ட அந்த இடம் வறண்டது போல் காட்சியளித்தாலும், இமயமலை அழகுடன் சுற்றிலும் சவுக்கு மரங்கள் அணிவகுத்து நின்றது மிகவும் ரம்மியமாக இருந்தது.
அங்கிருந்த தொலைக்நோக்குக் கருவியால் எதிரே நீண்டுக் கிடந்த இமய மலைச்சாரலில் கைலாயத்தின் சிவலிங்கம், பத்ரிநாத், உபேந்திர மன்னனின் அரண்மனை, அம்மன் கோயில் போன்று இன்னும் பல அரிய இடங்களைக் கண்டோம். அங்கு, ‘சிம்லாபாரம்பரிய உடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அழகிய, சுகமான அனுபங்களை மனதில் நிறைத்துக் கொண்டு, மதியம் விடுதி திரும்பினோம். அன்று இரவு 7 மணி முதல் சிம்லாவின் கடைவீதியில் வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம் என்று முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் தலைவர். சிம்லாவின் அழகிய வீதியில் வலம் வந்த போது சிம்லாவின் குளிர் உடலுக்குப் பழகி விட்டது!
குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் கிளம்பி சிம்லா கடைவீதிகளுக்குச் செல்ல தயாராகிவிட்டோம். ஆனால் திரு.பன்னீர் செல்வன், திரு.சேகரன், திரு.கலைச்செல்வன், திரு.முருகையா ஆகியோரைக் காணவில்லை. அன்று உடல்நிலைக் குறைவு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் படுத்துவிட்டார்களோ என பச்சாதாபம் ஏற்பட்டது. அவர்கள் அறை எண்ணும் தெரியவில்லை. எனவே, முனைவர் சபாபதி, மக்கள் ஓசை நிருபர் திரு.புவனேஸ்வரன், ஆசிரியை திருமதி. உஷா, நயனம் ஆசிரியரின் மகள் நயனதாரா ஆகியோருடன் பொருட்கள் வாங்கக் கிளம்பினோம். அந்த கடைவீதியின் அழகில் மயங்கி நிறைய நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம். குறிப்பாகஅன்பே வா’” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆடிப் பாடியபடி வலம் வந்த தேவாலயம், பிற இடங்களிலும் நேரம் போவது தெரியாமல் நிழற்படம் எடுத்துக் கொண்டோம்.
அங்கேயே மணி 7.30 நெருங்கியது. கடை வீதிகள் 8.30 மணிக்கே அடைத்து விடுவார்கள் என்று யாரோ தப்பான தகவல் தந்து விட்டார்கள். எனவே, அவசர அவசரமாக பொருட்கள் வாங்கக் கிளம்பினோம். சிறிது நேரத்தில், புவனேஸ்வரன்அக்கா நான் ஹோட்டலுக்குப் போகிறேன். நீங்கள் பத்திரமாக வந்து விடுங்கள்என்றார். எங்களுக்குள் ஒரு பயம்தான். எங்கள் குழுக்களில் உள்ள மற்றவர்களைக் காணவில்லை. ஆனாலும், விடுதிக்குச் செல்லும் பாதை தெரியும் என்ற தைரியத்தால் பொருட்கள் வாங்கிவிட்டே கிளம்பலாம் என்று நினைத்தேன். உடன் வந்த ஆசிரியை ஆதிலட்சுமி, “8.30 கடை மூடி விடுவார்கள். மற்றவர்களையும் காணவில்லை. நாம் டில்லியிலே போய் வாங்கிக் கொள்ளலாம்என்று ஆலோசனைக் கூறினார்.
அந்த சமயம், பூச்சோங் வாசகர் வட்டத்தலைவர் திரு.எம்.கே.சுந்தரம், திரு. அந்தோணி மாசிலாமணி, திரு. கோபாலன் ஆகியோர் நாங்கள் இருக்குமிடம் வந்தனர். திரு. கோபாலன் அவர்கள்என்னை ஹோட்டலுக்கு கூட்டிப் போக முடியுமா, 8 மணிக்கு சுடுநீர் அடைத்து விடுவார்கள். எனக்குப் பாதை சரியாகத் தெரியாது. கொஞ்சம் உதவி செய்ங்கஎன்று என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கோ பொருட்கள் வாங்க முடியவில்லை என்ற ஏமாற்றம் இருந்தாலும், அவர்பால் நல்ல அபிமானம் இருந்ததால் சரி தில்லியிலே சென்று வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து அந்த மூவருக்கும் வழிக்காட்டியபடி விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.
இரவு உணவை தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் தயார் செய்திருந்தார். அன்று நம் ஊர்நாசி லெமாக்என்றதும் ஒரு பிடி பிடித்தோம். உண்மையிலே தலைவர் நன்றாகத்தான் சமைத்திருந்தார். சாப்பிட்டு முடிக்கும் வேளையில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர் கை நிறையப் பைகளுடன். அப்பொழுது மணி 10.00. என்னுடன் வந்தவர்களில் பாதி பேர்களுக்கு மேல், “ஷாப்பிங்முடித்து விட்டு அப்பொழுதுதான் வந்தார்கள். 8.30 மணிக்கு கடைகள் அடைத்து விடும் என்றவர் மேல் கோபம் வந்தது. அதோடு எங்களோடு வந்த புவனேஸ்வரன் 10.30க்குதான் விடுதிக்கே திரும்பினார். “நயனம் ஆசிரியர் திரு.இராஜகுமாரன் உடன் வரச்சொன்னார். தடுக்க முடியவில்லைஎன்று சமாதானம் செய்தார். மொத்தத்தில் தரமான, மலிவான விலையில் நல்ல பொருட்களை எங்களால் வாங்க முடியாமல் போய் விட்டது குறித்து மனம் கொஞ்சம் வேதனைப்பட்டது. நல்லவேளை எனக்கு ஒருசில அலங்காரப் பொருட்கள் வாங்க அவகாசம் கிட்டியது. ஆனால், என்னை விட அதிக வேதனைப் பட்டவர் என்னுடன் வந்த ஆசிரியை ஆதிலட்சுமி. மறுநாள் காலை, எங்கள் அறுவர் குழு சக நண்பர்களிடம் வருத்தத்துடன் நலம் விசாரித்தேன். திரு.பன்னீர் செல்வன்எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. We all ok. நாங்கள் மூன்று மணிக்கேஷாப்பிங்போய் விட்டோம்என்றாரே பார்க்கலாம். புது தில்லியில் அவசர அவசரமாகஷாப்பிங்செய்தது வேறு விசயம்.
இருதினங்கள் சிம்லாவில் சில்லென்று நகர்ந்தன. எங்கள் பயணம் சண்டிகார், பஞ்சாப் வழியாக திரும்பவும் புது தில்லி நோக்கிச் சென்றது. சில்லென்ற காலை வேளையில் தொடர்ந்த எங்கள் பயணம் மிகவும் சுகமாக இருந்தது. வழி நெடுக புது மனிதர்கள், புது இடங்கள். ஆனால், சுகாதாரமின்மை மட்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. மழை இல்லாததால் புழுதி அதிகமாக இருந்தன. அதனால் ஏற்கனவே சிவந்திருந்த என் கண் வலது மிகவும் பாதித்து விட்டது. திரு.பன்னீர் செல்வன் நம் ஊர் “eye mo” கொடுத்தார். அதை ஊற்றியும் பலனில்லை. திரு. மணியரசனோ சோர்ந்திருந்த என்னை பார்க்கும் போதெல்லாம்எங்கே கண் அடியுங்கள்என்று கிண்டல் செய்தவாறே கலகலப்பு ஊட்டினார். நான்காண்டக் லென்ஸ்அணிபவள். அதனால் நான் அதை அணிய முடியாமல் பெரும் அவதிப்பட்டேன்.

No comments:

Post a Comment