Wednesday, September 28, 2011

தத்துவம் என்றால் என்ன? தத்துவம் நமக்குத் தேவையா?

தத்துவம்
வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும், இடையூறுகளையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் தத்துவம் மனிதனுக்குத் தருகிறது. செயலூக்கத்துடன் இலட்சியத்தை நோக்கி முன்னேற அவனுக்கு உதவுகிறது. அத்தகைய தத்துவக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதே இப்பகுதியின் நோக்கம்.
பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாக விளங்குவது எது, பிரபஞ்சத்தின் இரகசியங்களையும், இயற்கையின் சக்திகளையும் மனிதனால் புரிந்து கொள்ள முடியுமா, முடியுமெனில் அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்த மனித அறிவால் முடியுமா, பிரபஞ்சமும், மனித சமூகமும், மனிதனுடைய சிந்தனையும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்னேறிச் செல்கிறதா, ஆம் எனில் அவ்விதிமுறைகள் யாவை, சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம் யாது, அவனுடைய இயல்பு யாது என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு விடைகாண வழிகாட்டுவதே தத்துவம் ஆகும். [.....]

கவிதைகள்

மரபுக் கவிதைகள்

மரபுக் கவிதைகள்
தமிழ் யாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, தொடக்க காலத்தில் ’புதுக்கவிதை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அதுவே ’கவிதை’ என்றாகிப் போனது. யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’ ஆயிற்று. 1968-1978 ஆண்டுகளில் நான் எழுதிய மரபுக் கவிதைகள் சிலவற்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
புலரட்டும் புதுவாழ்வு!
கூப்பாடு போட்டிங்கே வெற்றி காணல்
        கொக்குதலை வெண்ணெய்வைத்துப் பிடித்தல் போலாம்!
பூப்போட்டுப் பூஜித்து வாழ்ந்த தெல்லாம்
        போதும்!இனி புதியதொரு உலகம் பூக்க
ஏற்பாடு செய்திடுக! ஆர்ப்ப ரித்தே
        எழுந்துவிட்டால் எவரிங்கே எதிர்த்து நிற்பார்? [.....]
நட்சத்திரங்களின் மரணத்தில் ஒரு ஞான விடியல்!
ஈர நினைவின் குளுமையிலே – ஓர்
       இன்பக் கனவு மலர்கிறது!
தூர நிலவின் தனிமையிலே – அது
       துன்ப நிழலாய் வளர்கிறது! [.....]
காரணத்தோடு நான் சிரிப்பேன்!
வானத்தில் ஒருநாள் மேகங்கள் மாறும்
வாழ்க்கையில் அதுபோல் துயரங்கள் தீரும் – அந்தக்
காலத்தில் என்றன்
காவியம் யாவும்
ஆனந்தத்தோடு அரங்கேறும்! [.....]
சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்...
பெருமூச்சின் இளஞ்சூட்டில் – யுகப்
       பிரளயத்தைப் பிரசவிப்பார்!
திருநாட்டின் வீதிகளில் – வசந்த
       தேரோட்டம் நடத்திவைப்பார்! [.....]
இந்தப் பாவிமகன் சாகும்வரை...
மனக்கோயில் வாசலிலே வரைந்த கோலம்!
       வாட்டங்கள் தீர்த்துவைத்த வசந்த காலம்!
பனிக்கால வைகரையின் பரவ சங்கள்
       பவனிவரும் மழலைமுகம் பவழத் திங்கள்! [.....]

நினைவில் நிற்கும் கவிதைகள்


எத்தனையோ கவிதைகளைப் படிக்கிறோம், ரசிக்கிறோம். ஆனால் அவற்றுள் சில கவிதைகள் மட்டும் நினைவைவிட்டு அகலாமல் நிலைத்து நிற்கின்றன. இயற்றிய கவிஞர் பெயர் மறந்து போனாலும் கவிதை நெஞ்சில் நிற்கும். வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அதன் வாசம் மனதில் வீசும். அப்படி என் மனதில் இடம்பிடித்த கவிதைகள் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுவேன். இணையத்தில் கண்டெடுத்த ஒரு கவிதை. படைப்பாளியின் பெயர் தெரியவில்லை.
அம்மா
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்.
‘குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே’
என்றான் அண்ணன்.
‘எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே’
என்றாள் அக்கா.
‘சளி பிடிச்சிட்டு செலவு வைக்கப்போற பாரு’
என்றார் அப்பா.
தன் முந்தனையால்
என் தலையைத் துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!

இலக்கியம்


பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் நான் ஓர் இலக்கியவாதியாகவே இருந்துள்ளேன். இலக்கிய ஆர்வலனாகவும், படைப்பாளியாகவும், விமர்சகனாகவும் இருந்துள்ளேன். கவிஞனாக வாழ்ந்திருக்கிறேன். யாப்பிலக்கணத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். மரபுக் கவிதைகளின் நீள, அகல, ஆழங்களைக் கண்டிருக்கிறேன். வெண்பாவில் விளையாடி இருக்கிறேன். எண்சீர் விருத்தங்களில் இழைந்திருக்கிறேன். புதுக்கவிதை என்று சொல்லப்படும் இக்காலக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை.
கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் முழங்கியுள்ளேன். சிலகாலம் ஓர் இலக்கிய இதழை (சகாப்தம்) நடத்தியுள்ளேன். அதன்மூலமாக அக்கால முன்னணித் தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன். ஓர் இலக்கியவாதியாக என்னுடைய படைப்புகளை, கருத்துகளை இப்பகுதியில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளேன்.