Sunday, October 16, 2011

ஐயா அப்துல் கலாமுடன் சில மணித்துளிகள்


அன்று மாலை 5.30 மணிக்கு எல்லோரும் கிளம்ப ஆயத்தமானோம். அதற்கு முன்பாக எங்கள் பொருட்களை எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்தோம். அதற்கும் முன்னேற்பாடாக, எங்களின் சிரமத்தைக் குறைக்க, பொருட்கள் 20கிலோவுக்கு மேல் போகாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு நிறுவை ஒன்றினை எடுத்து வரச்செய்து ஒவ்வொருத்தராக தங்கள் பொருட்களை நிறுத்துப் பார்த்து எடையை சரிபார்த்துக் கொள்ள ஏதுவாகவும் வழி வகுத்துத் தந்தார் தலைவர். அவரின் முன்னெச்சரிக்கையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஏறக்குறைய 6.40 மணியளவில் ஐயா அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கும் அரும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு பெருந்தலைவரின் வீடு போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தது அவர் இல்லம். கேட்டின் முன்புறம் ‘Rajaji Margh, 10” என்று எழுதியிருந்தது. பாதுகாவலர்கள் ஒவ்வொருவரையும் முறையாக சோதித்து விட்டுதான் உள்ளே அனுப்பினார்கள். வீட்டின் முன்புறம் அழகான ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கின. இருக்கைகள் சிவப்பு, நீலம், வண்ணங்களில் பளிச்சென்று காட்சியளித்தன. அவர் மேசை மேல் இருந்தக் குறிப்பேட்டில்மலேசிய எழுத்தாளர்கள் - 40 பேர்கள்என்று எழுதியிருந்தது. அவரின் வருகைக்காக காத்திருக்கையில் திடீரென்று எங்கள் முன் கை குவித்தபடி புன்னகையுடன் வந்தார். எல்லோரையும் ஒருவித பரவசம் பற்றிக் கொண்டது. எல்லோரிடமும் மிகவும் சகஜமாகவும், அந்நியோனியமாகவும் பழகினார். அங்கு ஒரு முன்னாள் அதிபரையோ, விஞ்ஞானியையோ நான் காணவில்லை. ஒரு குழந்தையைத்தான் பார்த்தேன். கள்ளம், கபடமற்ற சிரித்த முகம்.
திரு.இராஜேந்திரன் கல்வி ஆணையத்தைச் சார்ந்த அதிகாரிகள், மற்ற இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தினார். தலைவர் சொல்வதை மிகவும் பொறுமையாகக் கேட்டார். பிறகு, ‘பெண்கள் எல்லாம் என்ன செய்றீங்கஎன்று வினவியவாறேநீங்க என்னம்மா தொழில் செய்யறீங்க?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். மிகவும் மகிழ்ச்சியுடன் பதிலளித்தேன். அவர் கேட்டது இன்னும் கனவைப் போலவே உள்ளது. எல்லோருடைய அறிமுகமும் முடிந்ததும்வேறு ஏதும் கேட்பதானால் கேட்கலாம்என்றார் முன்னாள் அதிபர். உடனே திரு.இராஜேந்திரன்செண்பகவள்ளி நீங்கள் கேளுங்கள்என்றார். அந்த நிமிடம் நான் மிகவும் நெகிழ்ந்துப் போனேன். குறைவான கால அவகாசத்தில், மதியம் சொன்ன விசயத்தை மறக்காமல் நினைவுக் கூர்ந்து அங்கு எனக்கு ஐயா அப்துல் கலாமுடன் பேச வாய்ப்பு வழங்கிய தலைவரை நான் பெரிதும் நன்றியுடன் நினைத்துப் பார்த்தேன்.
அனைவரும் முடிந்த அளவு எவ்வளவுப் புகைப்படங்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து முடித்தோம். ஐயா அப்துல் கலாமை சந்தித்தப் பிறகுதான் இந்தப் பயணம் நிறைவுப் பெற்றதைப் போல் ஒரு திருப்தி அனைவருக்கும். ஒரு சிலர்ஆட்டோகிராப்வாங்கினார்கள். நான் சற்று தூரமாக இருந்ததால் திரு. பன்னீர் செல்வன் மூலமாக திரு. சேகரனிடம் கொடுத்துஆட்டோகிராப்வாங்கச் சொன்னேன். பிறகு நான் ஐயா அப்துல் கலாமிடம் சென்று புத்தகத்தை வாங்கிக் கொண்டு நன்றிக் கூறினேன். அவரின் மென்மையான சிரிப்பில் நான் மெய்மறந்தேன். விடைப் பெற்று திரும்பும் வழியில் திரு.சேகரன், “எல்லோருக்கும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்திட்டார். உங்கள் பெயர் கேட்டதும், தமிழ் பெயர் என்பதால் தமிழிலேயே கையெழுத்துப் போட்டார்.” என்ற அவர் கூறிய தகவல் மேலும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
ஒன்பது நாட்களும் நீண்டதொரு பயணத்தைதான் மேற்கொண்டோம் ஆனால் அலுப்பைத் தரவில்லை. காரணம் பயணக்குழுவினரின் அன்பு, அறிமுகப் படலம், இலக்கியப் பணிகள், கவிதைப் போட்டி என கலகலப்பாக அனைவரும் பங்கேற்றதால் உடல் அசதியையும் மறந்து உற்சாகமாய் பங்கேற்றோம். இந்தப் பயணத்தின் போது என்னை ஒரு குழந்தையாய் அனுசரித்த திரு. இராஜேந்திரன், கெடா, சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்ப்பிரிவுத் தலைவர் திரு. பன்னீர்செல்வன் அந்தோணி; தேர்வு வாரியத் துணை இயக்குனர் திரு.சேகரன், தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி ஆதிலட்சுமி, தலைமையாசிரியர் திரு.கலைச்செல்வம், ஆசிரியர் திரு. முருகையா மற்றும் விரிவுரையாளர் திரு. மணியரசன் ஆகியோருடன் என் ஒன்பது நாட்கள் பயணம் பாகாய் கரைந்தன. என்னுடன் பயணித்த சக இலக்கியவாதிகளின் அன்பிலும், பாசத்திலும் நான் மெய்மறந்துதான் போனேன். சிறு தலைவலியோ அல்லது சோர்ந்திருந்தாலோ என்னவென்று பதறி அன்புடன் கவனித்துக் கொண்டனர். இனிமையான நாட்கள் விரைவில் கடந்து விட்டன என்ற ஏக்கம் என்னுள் ஏற்பட்டது.
இப்பயணத்தை நான் மறக்கவே முடியாது. இந்த பயணத்தில் இலக்கிய ஆர்வலர்கள், மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, வரலாற்றுப்பூர்வமான இடங்கள், கங்கையில் நீராடல், என் இஷ்ட தெய்வமான சிவபெருமான் தரிசனம், தாஜ்மஹாலில் அழகு அனைத்தையும் காண முடிந்தது நான் செய்தப் பாக்கியம்தான்கொடுப்பினை எல்லோருக்கும், எல்லா நேரத்திலும் கிடைக்காது என்பார்கள். எனக்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரின் வாயிலாக நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத பிரமுகர் ஐயா அப்துல் கலாம் அவர்களுடன் சந்திப்பு, மேலும் வரலாற்றுப்பூர்வமான இடங்களில் என் தடம் பதிக்க முடிந்ததை நினைக்கும் போது இன்னும் கனவுலகில் இருப்பது போன்று ஓர் எண்ணம் எழுகிறது. இது என்னை பிரமிக்க வைத்த ஓர் இலக்கியப் பயணம்!
பிரியாத பிரிவுகள்!
(வட இந்திய இலக்கியப் பயணத்தை ஒட்டி எழுதியக் கவிதை)
ஒன்பது நாட்கள் பயணம்
ஒன்பது யுகங்களாய் மாறியன;
ஒவ்வொரு மணித்துளிகளும்
ஒவ்வொரு கதையைக் கூறியன!!!

பிரயாணப் பந்தத்தில் சேர்ந்தோம்
பிறழாத அன்பினைப் பகிர்ந்தோம்
பிழையில்லா நட்பில் இணைந்தோம்
பிரியாத பிரிவுடன் பிரிந்தோம்!!!

ஆன்மாவில் கலந்திட்ட அன்பு
ஆத்மார்த்தமாய் ஒன்றிட்ட உணர்வு
ஆதரவாய் கனிந்திட்ட கனிவு
ஆண்டாண்டாய் மலர்ந்திட்ட நட்பு!!!