Sunday, October 16, 2011

வெ.இறையன்புவின் ஐந்து கவிதைகள்:

சமாதானம்:

கடைசியாய் இருப்பதே
பிடித்திருக்கிறது.

யாரும் பின்னுக்குத் தள்ளாமல்
எத்தனை பேர் வந்தாலும்
தக்க வைத்துக் கொள்வதில்
தகராறு இல்லாமல்
போட்டியில்லாமல்
சலனமற்று
ஆழ்ந்திருக்க உதவுவதால்

நின்றிருக்கும்
நீள் வரிசையையே
வட்டமாக மாற்ற மட்டும்
தெரிந்து கொண்டால்
யார் கடைசி
யார் முதல்?

விரதம்:

உனக்குத் தெரியாது;
நான்
உளிகளைப்
பொறுத்துக் கொள்வதெல்லாம்
சிற்பமாவதற்கு
சம்மதித்து என்பது.

தனிக்கட்சி:

நாங்கள் இருவரும்
காதலில் நம்பிக்கையில்லை
என்ற எங்கள்
ஒத்த கருத்தினால்
அறிமுகமாகி
சந்தித்துப் பேசி
நண்பர்களானோம்.
அடுத்த ஆவணியில்
எங்கள்
திருமணம்.

வாய்மை:

அமைதியாக
வருகின்ற நிலவல்லவா
இரவெல்லாம்
நிலைத்து நிற்கிறது.
இடி என்னும்
தண்டோரா
போட்டுக் கொண்டு
வரும் மின்னல்
நொடியில்
மறைந்து விடுகிறது.

வாக்காளர்கள்:

மலர்கள் கசங்கி
உதிர்ந்த பின்னர்
நார் மட்டும்
அடுத்த மாலை கட்ட
மீண்டும்
தேவைப்பட்டது.

No comments:

Post a Comment