Sunday, October 16, 2011

பாரதி, மகாகவி: வரலாறு-5

         வரலாற்றில் தவிர்க்க இயலாமல் தோன்றும் சில புரட்சிகரமான போக்குகள் மற்றும் போராட்டங்களின் சூழலில்தான் பெருங்கவிஞர்கள், சிந்தனையாளர்கள், மெய்யியலாளர்கள், மாவீரர்கள் தோன்றுகின்றனர். வரலாற்றின் திரண்ட சக்திகள்தான் இவர்கள் மூலம் வெளிப்படுகின்றன. வரலாற்றை இவர்கள்தான் உருவாக்குகின்றனர் என்பதுபோலத் தோன்றினாலும், மேதைகள் எனப் பெயர் பெறும் இவர்கள் வழிஏ இயங்குவது மக்கள் சக்திகள்தாம். ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் இவர்கள் புதிய மெய்யியலை, புதிய இலக்கியத்தைப் படைக்கிறார்கள். தமிழக வரலாற்றிலும் பெருங்கவிஞர்கள், மெய்யியலாளர்கள் என்பவர்களின் தோற்றத்தை இத்தகைய வரலாற்றுத் திருப்பங்களில் வைத்துக் காண்பதுதான் பொருத்தமாக இருக்க முடியும். இத்தகைய வரலாற்றுத் திருப்பங்களில் முதலில் கவிஞர்கள்தான் தமக்குள் வரலாற்று நெருக்கடியை உணர்ந்தோ, அறிவுப்பூர்வமாக உணராமலோ வெளிப்படுத்துகிறார்கள் என்றும், இதன் அடுத்த கட்டத்தில்தான் மெய்யியலாளர்களூம், அதன்பிறகு அறிஞர்களும் தோன்றுகின்றார்கள் என்றும் சில அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இது எப்படியாயினும் வரலாற்றின் குவி முனைகளில் கவிஞனுக்குள் அல்லது மெய்யியலாளனுக்குள் அல்லது மாவீரனுக்குள் இலக்கியம், மெய்யியல், அரசியல் பலவும் ஒருங்கிணைந்த எழுச்சி வெளிப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு உடனடியாகப் பிறரால் புரிந்து கொள்ளப்படுவது சாத்தியமில்லை. சில கட்டங்கள் தாண்டிய பிறகே இந்த ஒருங்கிணைப்புப் பலராலும் புரிந்து கொள்வது சாத்தியப்படும். இதன் காரணமாகத்தான் ஒரு கவிஞன் அல்லது மெய்யியலாளன், இன்னொரு கட்டத்தில் பெரும் புகழ் வாய்ப்பதும் இதனால்தான். பாரதிக்கும் நேர்ந்தது இதுதான். பாரதி இந்திய வரலாற்றின் ஒரு குவி முனையில் தோன்றினான். அவனுக்குள் பல்வகை ஆற்றல்களூம் பார்வைகளும் திரண்டிருந்தன. இவற்றின் பேரெழுச்சியாகப் பாரதி வெளிப்பட்டான். வரலாற்றின் தொடர்ச்சியான இயக்கத்தின் மூலம் பாரதியின் பல்வேறு கூறுகளூம் புரிந்து கொள்ளப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்டன. பாரதி மகாகவி ஆவான். பாரதியைப் போலவே கம்பரையும் இளங்கோவையும் பெருங்கவிஞர்கள் என்று நாம் மதிப்பிடும்பொழுது, அவர்களின் வரலாற்றுச் சூழலை வைத்தே மதிப்பிட முடியும். ஆதிக்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு அல்லது போராட்ட உணர்வின் வழியேதான் இவர்களை நாம் பார்க்க வேண்டும். வரலாற்றைப் புதியதாக மாற்றுவதற்கான இந்தப் பேரெழுச்சியின்போதுதான் மொழியிலும் புதுப்பொலிவுகள் தோன்றுகின்றன. இலக்கியம் புதியதாய்ப் படைக்கப்படுகிறது. புதிய வடிவங்கள் தோன்றுகின்றன. மரபை இவர்கள்தான் புதுமைப்படுத்தவும் செய்கின்றனர்.

வரலாற்றுக்குள் எழும் பல்வகைப் பரிமாணங்களோடு கூடிய பேரெழுச்சியைக் கவித்துவ வீறு என்று குறிப்பிடுவதே பொருத்தமாகும். இந்தக் கவித்துவத்தில் இலக்கியம் மட்டுமல்லாமல் மெய்யியல் முதலிய அனைத்துமே பெரும் படைப்புத்திறனோடு கிளம்புகின்றன. கவித்துவ வீறு என்பது சமூகத்தின் பல முனைகளிலும் தோன்றும் ஆற்றல் மிக்க படைப்புத்திறன்,. இந்தப் படைப்புத் திறனை இலக்கியம் என்றோ தத்துவம் என்றோ பிரித்துப் பேச முடியாது.

இப்பொழுது நாம் சொல்லலாம். பாரதி போன்ற பெருங்கவிஞரின் இலக்கியத்தை அல்லது கவிதையை மதிப்பீடு செய்யும்பொழுது கவிதையென்றோ, தத்துவம் என்றோ அரசியல் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. புரிந்து கொள்வதன் பொருட்டு பகுத்துப் பார்ப்பது தேவையென்றாலும் இவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும்பொழுதுதான் மகாகவியின் பெருந்தோற்றம் வெளிப்படும்.

பாரதிக்குள் முதலில் அரசியலை, பிறகு கவிதையை, பிறகு தத்துவத்தை, அதன் பிறகு சமூகத்தை, உணர்வைக் கண்டதும் இவற்றின் அடிப்படையில் கு..ரா. முதல் சிவத்தம்பிவரை மதிப்பிட்டதையும் நாம் பார்த்தோம். பாரதியின் அரசியல் கவிதைக்குள்ளே பிற அனைத்துக் கூறுகளும் இணைந்திருக்கின்றன. கவிதையிலிருந்து மெய்யியலைப் பிரிக்க முடியாது. கவிதையிலிருந்து சமூக உணர்வை மற்றும் அரசியலைப் பிரித்துப் பேச முடியாது. இராசாசி, பாரதியை வேதாந்தக் கவி என்று மதிப்பிட்டதை அணுகிப் பார்த்தால், பாரதியின் மெய்யியல் கூறு அல்லது மேன்மை புலப்படும். வேதாந்தம் என்ற சொல் இராசாசியைப் பொறுத்தவரை ரிக் முதலிய வேதங்களோடு சார்ந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கலாம். அதைப்போலவே தத்துவம் என்ற சொல்லும். ஆனால் உண்மையில் இந்தச் சொற்கள், அவற்றின் ஆழத்தின் மெய்யியல் என்ற புரிதலை நமக்குத் தருகின்றன. பாரதியிடம் படைப்புத் திறன் என்பது பல முனைகளிலும் திரண்டு எழும் பேரெழுச்சி என்றுதான் நாம் இன்று புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய விரிவான பார்வை 20-ஆம் நூற்றாண்டில் மெல்ல மெல்லத்தான் நமக்குள் உருவாயிற்று. தமிழகத்தின் அரசியல் மற்றும் இலக்கியத்திற்குள் மார்க்சியத்தின் நுழைவை அடுத்துத்தான் இத்தகைய விரிந்த பார்வை நமக்கு வசப்பட்டிருக்கிறது. ஓர் இலக்கியத்தின் மேன்மையை மதிப்பிடுவதற்கு அதனுள் செயல்படும் பலமுனைப்பட்ட கவித்துவ வீறு கொண்டுதான் மதிப்பீடு செய்ய முடியும். இதன் கூறுகளில் அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் அடங்குகின்றன. கு..ரா.விற்கோ, செல்லப்பாவுக்கோ கவித்துவ வீறு என்பதன் பல்வகைப் பரிமாணங்கள் புலப்படாதிருந்திருக்கலாம். சிவத்தம்பி முதலியவர்களும் இது பற்றிக் கவனம் கொள்ளாது இருக்கலாம், எனினும் இலக்கிய வரலாற்றாய்வின் வழியே இப்பார்வை இன்று நாம் பெறுவது சாத்தியப்பட்டு இருக்கின்றது. இந்தப் பார்வையின் அடிப்படையில் பாரதி மட்டுமல்லாமல் கம்பர் முதலியவர்களின் இலக்கிய ஆளுமைக்கான வரையறைகள் / அளவுகோல்கள் என்ன என்பதை நாம் தீர்மானிக்க முடியும். அன்றியும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியின் இடம் என்ன என்பதையும், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை மதிப்பீடு செய்வதற்குப் பாரதியின் வழியே நமக்குக் கிடைத்த அளவுகோல்கள் என்ன என்பதையும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினுள் பாரதி ஏற்படுத்திய திசைமாற்றம் என்ன என்பதையும் சரியாகக் கணித்தறிய முடியும்.

இந்தக் கட்டுரை எழுதுவதற்குப் பயன்பட்ட சில நூல்கள்:

1.
கண்ணன் என் கவி: ஆசிரியர்: கு..ரா, சிட்டி, செல்லப்பா
2.
பாரதி - மறைவு முதல் மகாகவி வரை - பேராசிரியர் கா.சிவத்தம்பி, .மார்க்ஸ்
3.
பாரதி கவிதைகள் - தொகுப்பாசிரியர் - மா.ரா.போ. குருசாமி - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.
4.
பாரதி பற்றி கல்யாணராமன் எழுதிய நூல்

குறிப்பு: 1997 - மார்ச்சில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் 115-ஆம் பிறந்த நாள் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கட்டுரை.

No comments:

Post a Comment