Sunday, October 16, 2011

பாரதி, மகாகவி: வரலாறு - 1


1936 வாக்கில் தமிழகத்தில் பாரதியார் மகாகவி இல்லையா என்ற விவாதம் எழுந்தது. காரைக்குடியில் .ரா. பேசும்போது பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு சேக்ஸ்பியரோ செல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினாராம். பாரதியாரை மகாகவி என்று அடைமொழி தந்து நூல் எழுதியதோடு, தன் காலம் முழுவதும் பாரதி புகழ் பாடுவதையே தன் கடமையாக .ரா. கொண்டிருந்தார். .ரா.வின் கருத்து
கடுமையான சர்ச்சைக்குள்ளாகியது. சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், தினமணி ஆகிய இதழ்களில் 'நெல்லை நேசன்' என்ற புனைபெயரில் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் தமிழ்க் கவிதையில் பாரதியின் இடத்தைக் கேள்விக்குரியதாக்கி எழுதினார்கள். பாரதியைத் தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், சேக்ஸ்பியர், செல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்கள்.கு..ராவும் சிட்டியும் விரிவாக மறுப்பு எழுதினார்கள். ஓமர் முதலிய பெரும்கவிஞர்கள்பலரோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு நிகராக பாரதியை மகாகவி என்றார்கள்.
விவாதத்தின்போது தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு அல்லது மதிப்பீடு என்பதே இன்னும் தோன்றவில்லை என்றும், தமிழ்க் கவிதையில் பாரதியின் இடத்தை நிர்ணயிப்பதன் மூலமே பிற கவிஞர்கள் பற்றிய மதிப்பீட்டிற்கு வழி பிறக்குமென்றும் கு..ரா. முதலியவர்கள் குறிப்பிட்டார்கள்விவாதத்தில் முதலில் எழுந்த சூடு தணிந்த நிலையில் பாரதியார் பற்றிய இந்தத் திறனாய்வு நாளடைவில் தமிழில் திறனாய்வு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டார்கள். "கண்ணன் என் கவி" என்ற இவர்களது கட்டுரைகள் அடங்கிய நூல் 1937-ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. அவர்கள் எதிர்பார்த்த முறையில் தமிழில் பாரதியார் பற்றியோ, வேறு படைப்பாளிகள் பற்றியோ திறனாய்வுகள் தோன்றவில்லை. சுமார் 50 ஆண்டுகள் கழிந்த நிலையில் 1981-இல் இந்த நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இதில் சி.சு.செல்லப்பா அவர்களின் கட்டுரையும் இடம் பெற்றது. பாரதியார் மகாகவிதான் என்பதை செல்லப்பா ஒத்துக் கொள்கிறார். அதே சமயம் தமிழில் திறனாய்வு வளராதது குறித்தும், குறிப்பாகப் பாரதியார் பற்றிய மதிப்பீடு செய்யப்படாதது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிடுகிறார்.
கு..ரா. முதலிய எழுத்தாளர்களின் கவலையை நாம் புரிந்து கொள்கிறோம். தமிழில் திறனாய்வு, அவர்கள் விரும்பியவாறு ஏன் வளரவில்லை என்ற ஆய்வு தேவையானதுதான் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளலாம். கடந்த சில 10 ஆண்டுகளில் திறனாய்வு குறித்து நாம் நிறையப் பேசியிருக்கிறோம். பாரதியார் குறித்தும் அண்மைக் காலத்தில் சில கடுமையான எதிர் விமர்சனங்களூம் எழுந்துள்ளன. குறிப்பாகப் பாரதியாரின் பார்ப்பனியம் குறித்துச் சிலர் எழுதியுள்ளார்கள். இவைபற்றியெல்லாம் நாம் கருத்துச் செலுத்துவது அவசியம்தான் என்ற போதிலும், பாரதியாரை மகாகவி என நிலைநிறுத்துவதற்கு, கு..ரா, சிட்டி, செல்லப்பா ஆகியவர்கள் முன்வைத்த வரையறைகள் முதலியவற்றின் தகுதிப்பாடு குறித்து இப்பொழுது நாம் ஆராய வேண்டும். பாரதியார் மகாகவிதான் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. கு..ரா. முதலியவர்களின் கருத்துக்களையும் நாம் அதே வடிவில் இன்று எந்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். தமிழில் திறனாய்வு ஓரளவுக்கேனும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் கு..ரா. முதலியவர்களின் கருத்துக்களை ஒரு மறுமதிப்பீடு என்ற முறையில் பார்க்க வேண்டியிருக்கிறது.
பாரதியை மகாகவி என்று மதிப்பீடு செய்ய விரும்பிய இவர்கள் வடமொழியிலும், மேற்குலகில் கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம், செருமனி முதலிய மொழிகளிலும் பெருங்கவிஞர்கள் எனப் புகழ் பெற்றிருக்கும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பெருங்கவிஞர்கள் என்று மதிப்பீடு செய்யும் முறையில் ஏற்கனவே பலர் முன் வைத்திருந்த சில கருத்துக்களையும் குறிப்பிடுகிறார்கள். வால்மீகி, காளிதாசர், ஓமர், வர்ஜில், தாந்தே, சேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், செல்லி, பைரன், கத்தே, என்ரிச்எய்ன் ஆகிய பெருங்கவிஞர்களை இஅவர்கள் குறிப்பிடுகிறார்கள். சீனக் கவிஞர்களூம், அரபுக் கவிஞர்களூம் இவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். கு..ரா முதலியவர்கள் ஆங்கில மொழியோடு கொண்டிருந்த நெருக்கமான உறவை நாம் புரிந்து கொள்கிறோம். ஆங்கில மொழியின் வழியே பிற மொழிக் கவிஞர்களோடும் இவர்கள் கொண்டிருந்த உறவையும் நாம் புரிந்து கொள்கிறோம். 1950/60 வரை கல்வி உலகத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு பெருமளவு இருந்தது. இன்று இந்த வாய்ப்புக் குறைந்து விட்டது.
வடமொழியில் இதிகாசம் எழுதியவர்கள் மகாகவிகள். வால்மீகி இராமாயணம் என்ற இதிகாசத்தை எழுதியவர். பாரதியார் எழுதியவை குறுங்காவியங்கள். ஆகவே பாரதியாரை வால்மீகியோடு ஒப்பிடமுடியாது. காளிதாசன், சாகுந்தலம் முதலிய நாடகப் பேரிலக்கியங்களைப் படைத்தவன். பல தலைமுறைகளின் கதையைச் சொன்னவன். பாரதி இப்படி எதையும் எழுதவில்லை. மகாபாரதம் என்ற இதிகாசத்தை எழுதிய வியாசரோடு, பாரதியை இவர்களில் யாரும் ஒப்பிடவில்லை. இதிகாசங்கள் என்பவை பத்தாயிரக்கணக்கான பாடல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட கிளைக்கதைகளையும் கொண்டு ஆலமரங்களைப் போன்ற அடர்த்தியானவை. இந்தியாவின் பழங்கால வரலாற்றை இன்றும் நமக்குச் சொல்பவை. இறைவனின் அவதார நோக்கம் குறித்த இதிகாசம் இராமாயணம், குருச்சேத்திரப் போரையும் பகவத்கீதை என்ற தத்துவ உரையையும் விரித்துரைக்கிறது மகாபாரதம். இத்தகைய பெரும் வீச்சுக்கள் பாரதியாரிடம் இல்லை.
30க்கு மேற்பட்ட நாடகங்களைப் படைத்த சேக்ஸ்பியரோடு பாரதியை ஒப்பிட முடியாது. மனிதகுல மீட்புக்காக இறைவன் அவதாரம் செய்த கதையின் முதற் பகுதியை மில்ட்டன் காவியமாகப் பாடினார். சாத்தானின் ஆளுகைக்கு இடம் கொடுத்து மனிதன் சொர்க்கத்தை இழந்தான். ஆகவே துன்புற்றான். ஓமர் கம்பீரமான காவியம் ஒன்றைப் படைத்தான். யுலிசிஸ் மேற்கொண்ட பயணம் அதன் கருவடிவில் வாழ்வின் நெடும் பயணத்தைக் குறிக்கிறது. வர்ஜிலின் காவியம் மனித வாழ்வின் தொடர்ந்த நிரந்தரமான பயணத்தைக் குறிக்கிறது. அறிவியலின் ஆதிக்கத்தை முழுமையாகத் தான் வசப்படுத்துக் கொள்ள வேண்டும் என்று புறப்பட்ட அறிவியலாளன் தன் ஆன்மாவை இழந்த கதையைச் சொல்லுகிறார், கத்தே. பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்துக்குட்பட்டவர் செல்லி, அன்றியும் தன் மாமனார் வழியாகப் பிளேட்டோ கூறிய பேரான்மாவின் உள் இயக்கத்தைத் தனக்குள்ளூம் கண்டவர் செல்லி. இந்தியாவில் தாகூரும் அனைத்து உயிர்களின் வாழ்வுக்குள்ளும் பிரம்மத்தைத் தரிசித்தவர். பிரபஞ்சத்தின் அனைத்துவகை இயக்கங்களுக்குள்ளூம் பிரம்மன் இயங்குகிறான்.
மனித வாழ்க்கை என்பது ஒரு மனிதன் என்ற ஒற்றைப் புள்ளிக்குள் குறுகி விடுவதில்லை. மனித வாழ்வின் வீச்சும், பிரபஞ்சத்தின் இயக்கமும் பிரிவுபடாதவை. மனித வாழ்வு ஒரு பெரும் நாடகம். அறத்திற்கும் மதத்திற்கும் ஆன இடையறாத போராட்டக்களம். அறத்திலிருந்து தவறிய மனிதனை மீட்பதற்காக இறைவன் மனிதனோடு இணைந்து செயல்படுகிறான். மாபெரும் துயரங்கள் என்ற தடையை மனிதன் கடந்து சென்று அறத்தோடு, இறைவனோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசைகள் அவனை வழிமறிக்கும். தடைகளுக் தயக்கங்களும் அவனை தடுமாறச் செய்யும். தன் உறவுகளையும் தன்னையும் கூடச் சுமந்து மனிதன் நெடுந்தொலைவில் தெரியும் இலக்கு தேடிப் பயணம் போக வேண்டும். இடையில் எத்தனையோ திரைகள் மற்றும் மாயைகள். தனக்குள் மிகச்சிறிதளவே தென்படும் ஆன்மாவின் ஒளியில் நம்பிக்கை வைத்து மனிதன் முன்செல்ல வேண்டும். இத்தகைய மாபெரும் வீச்சுக் கொண்ட மனித வாழ்வை இதிகாசமாக, காவியமாக, நாடகமாக படைப்பவன் மகாகவி.
மகாகவி என்ற சொல் கூட வடமொழியில் இருந்து நமக்கு வந்தது. பெருங்கவிஞன் எனத் தமிழில் பெயர்த்துச் சொன்னாலும் வடமொழியின் பொருளை இது தரிக்காது. மேற்கத்திய மொழியில் மகாகவி என்பதற்கு நிகரான சொல் இல்லை. 'மேஜர் பொயட்' என்ற சொல் மகாகவியெனப் பொருள்படாது. என்றும் சேக்ஸ்பியர், ஓமர் முதலிய பெருங்கவிஞர்களுக்குள் செயல்படும் வீச்சை நாம் புரிந்துகொண்டுதான் விவாதிக்கிறோம். சேக்ஸ்பியருக்கோ, மில்ட்டனுக்கோ, ஓமருக்கோ நிகரான கவியென செல்லியை அவர்கள் சொல்லுவதில்லை. இப்படிச் சில வேறுபாடுகள் இருந்த போதும், பெருங்கவிஞருக்குள்ளிருக்கின்ற ஆழ்ந்த வீச்சைப் புரிந்து கொள்ளூம் நிலையில்தான் இத்தகைய விவாதம் எழுகிறது. கு..ரா. முதலியவர்களுக்கு இந்த வரையறைகள் நன்கு புரியும் என்ற முறையில்தான் நாம் இங்கு விவாதிக்கிறோம். மகாகவி என்ற சொல்லின் பொருள் ஆழத்தைப் பெருங்கவி என்ற ஓர் சொல்லுக்குள்ளூம் நாம் வைத்துக் காண்கிறோம்.
பாரதியை தேசியக்கவி என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இந்திய தேசம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த நிலையை ஒப்புக்கொள்ளாமல் விடுதலை வேண்டி உணர்ச்சிமிக்க கவிதைகளை பாரதியார் பாடினார். இந்தியாவின் விடுதலை அவரது நோக்கம். இந்தியா விடுதலை பெற்றவுடன், அவரது கவிதைகளில் தங்கியுள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பு மெல்ல, மெல்லக் குறைந்துவிடும். அதன்பிறகு அவரது வரிகள் கவிதைகளாய் நிற்க முடியாது என்பது பரதியைத் தேசியக்கவி என்று மட்டுமே மதிப்பிடுபவர்களின் கருத்து. இப்படியரு விவாதம் 1935-36களில் எழுந்திருப்பது ஒரு விநோதம்தான். இப்படி விவாதிப்பவர்கள் தேசவிடுதலை என்பதைக்கூட பாரதியின் அளவுக்குப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று இன்று நாம் சொல்லலாம். பாரதியின் கவிதைகளை அழ்ந்து படிக்கும்பொழுது அரசியல் விடுதலையை மட்டும்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது உண்மையல்ல. பொருளாதார விடுதலை என்பதும் அவரது நோக்கம். சாதியிலிருந்து விடுதலை பற்றி பாரதியார் பாடுகிறார். பெண்ணுக்கு விடுதலை வேண்டுமென்கிறார். ஆன்ம விடுதலைதான் பாரதியின் இறுதி இலக்கு. தேச விடுதலைக்காகப் பாடும்பொழுதே அனைத்து விடுதலையும் பாரதியின் படல்களூக்குள் பின்னலாக வந்து விடுகின்றன. அரசியல் விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகப் பாரதியின் பாடல்கள் இல்லை.
இன்றும் பாரதியின் தேசியப் பாடல்கள் நம் மனத்தை முழு அளவில் ஈர்க்கின்றன. அடிமை கொள்கின்றன. 47க்கு முன் நாம் விரும்பி வேண்டிப் பெறத்துடித்த விடுதலை, இன்னும் நமக்குக் கைகூடவில்லை. மீண்டும் ஒரு சுதந்திரத்திற்கான போராட்டம் என்றுகூட இன்று நாம் பேசுகிறோம். பாரதி நமக்குள் மீண்டும் உயிர்த்தெழுகிறார். பாரதிக்கு மரணம் இல்லை.
பாரதியைத் தேசியக்கவி என்று மதிப்பிட்டவர்களின் பார்வை வீச்சுக் குறுகலானது தான் என்பதில் வியப்பில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது தேசம் பற்றித்தான் ஒரு கவிஞர் தீவிரமாகப் பாடமுடியுமென்று வைத்துக் கொண்டாலும், அதற்குக் குறிப்பிட்ட காலம் அல்லது தேசத்தின் வழியே உலகளாவிய மனித வரலாறு இயங்குவதைப் பாரதி பாடலினுள்ளூம் நாம் கூர்ந்து பார்க்க முடியும்.
பாரதியின் காலத்தில் தேசபக்தி என்பது சமயங்கள் சொல்லும் பக்தி உணர்வோடு கரைந்ததாக எழுச்சி பெற்றிருந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்ஒரு வகையில் இது பக்தி இயக்கத்தின் நீட்சி என்பதைக் காட்டிலும் மாற்று வடிவமென்று சொல்வது தகும். வங்கத்தில் பங்கிம் சந்திரர் மூலம் வந்தே மாதரம் என்று தொடங்கிய இந்தக் குரல் நாளடைவில் தேசத்தின் குரலாக மாறியது. துறவிகள் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்கள். நாளடைவில் கவித்துவ மனம் கொண்ட அனைவரின் குரலாக இது மாறியது. இந்தியா பாரத தேவி என உருவகம் பெற்றது. பாரத அன்னை பேருருவலத்தில் அற்புதமான அணிகலன்களோடு அருள் வீரம் முதலிய அழகுகளோடுதன் பக்தர்களின் நெஞ்சில் காட்சி தந்தாள். இவள் வாய் வேதங்களை அருளியது. உபநிடதங்களை சொல்லியது. இலங்கையை அழித்த இராமனின் வில் இவளது கைவில். கர்ணன் அணிந்திருந்த குண்டலங்கள் இவளுடையவை. 18 மொழிகளும் இவளுடைய மொழிகள். முப்பது கோடி மக்களீன் திருவுருவங்கள் இவளது உருவங்கள்.
பாரதியின் கவித்துவ நெஞ்சில் இத்தகைய பெரும்காட்சி எழுந்து நிறைந்தது. இமயமலை, கங்கை ஆறு, நீர் செழித்த நெல் வயல்கள் என்ற ஆயிரக்கணக்கான இயற்கைக் காட்சிகள் வழியே பாரத தேவியைத் தரிசனம் செய்கிறார் பாரதி. பாரதிக்குள் மேலும் ஒரு ஆழ்ந்த பார்வை. பராசக்தியின் வடிவம் இந்தப் பாரத தேவி. இவளே காளியாய், கண்ணனாய்த் திகழ்கிறாள். இவளுக்குள்ளே பேரருளாளர்கள், அறிவாளர்கள் அடக்கம். கீதை மட்டுமா இந்தப் பாரத தேவியின் உரைகள், புத்தரின் உரைகளும் இவளுடையவை. ஒரு கடவுள், பலநூறு வடிவங்களில் பலநூறு பெயர்கள். ஏசு என்பதும் நபி என்பதும்கூட இந்தப் பெயர்களில் அடங்கி விடுகின்றன. கண்ணனின் திருவுருவத்தை நெஞ்சில் நிறுத்துகிறார் பாரதி. அதே உருவம் புத்தனாய், ஏசுவாய் மாறுகிறது.
(தொடரும்)

No comments:

Post a Comment