Sunday, October 16, 2011

பாரதி, மகாகவி: வரலாறு -2

தேசம், விடுதலை என்ற பாரதியின் கருத்துக்களின் வழியே பயணம் செய்யும்பொழுது நமக்குள் ஏற்படும் விரிவை, வேறு எவ்வாறு விளக்க முடியும்! கங்கையும், காவிரியும் நமக்குள் புரண்டோடுகின்றன. மாபெரும் வரலாற்றின் வசப்படுகிறோம். நாமே எல்லாமாகவும் இருக்கின்றோம். இந்தியா என்ற எல்லைக்குள்தான் நாம் இருக்கிறோமா? பிரபஞ்சத்தின் எல்லைகள் தகரும் பேரலைகள் எழுகின்றன. பாரதியின் கண்ணன் பாட்டு முதலியவற்றுக்குள்ளும் பயணம் செய்கிறோம். பாரதி கூறிய அமரத்துவம் நமக்கு வாய்க்கிறது. இப்பொழுது நாம் உறுதியாகச் சொல்லலாம் - பாரதி ஒரு மகாகவி.

தேசியக்கவி என்று தொடங்கிப் பாரதியை மகாகவி என நம்மால் மெய்ப்பிக்க முடியுமென்ற போதிலும், கு..ரா. முதலியவர்கள் இந்த முறையில் விவாதிக்கவில்லை. கு..ரா.வைப் பொறுத்தவரை சக்தி என்ற தத்துவத்தை முன்வைத்து, அதன் மூன்று வகைப் பரிமாணங்களை பாரதிக்குள் விரிவாகக் கண்டு மகாகவி என நிறுவுகிறார். சக்தி என்பது அவர் கருத்தின்படி தெய்வம், தேசம் மற்றும் பெண்மை. பாரதி சக்தியை வழிபட்டார். சாக்தம் கூறும் சக்தி வழிபாடு பாரதிக்கு உடன்பாடு. காளி முதலிய வடிவங்கள் சக்தியின் வடிவங்கள். இருளுக்குள்ளும் இருக்கிற சுடர் சக்தி. தேசம் என்பதன் வழியே பாரதியிடம் விளங்குவது பராசக்தி. பெண்ணுக்குள் வெளிப்படும் வீர்யம் சக்தி. பெண் அடிமைத்தனம் பாரதிக்கு உடன்பாடில்லை. பெண்ணுக்கு விடுதலை வேண்டும். அவள் சக்தியாய் சுடர்விட வேண்டும். சக்தியின் முப்பரிமாணங்களையும் பாரதிக்குள் கண்டு கு..ரா.விளக்குகிறார். மூன்றுமே ஒரு வகையில் ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருந்தியவை. கு..ரா.வும் பெண் விடுதலையைப் போற்றுபவர்.

கு..ரா.வின் பார்வையைத் தத்துவம் என்று செல்லப்பா குறிப்பிடுகிறார். சக்தி என்பது இறைமையல்ல என்று செல்லப்பா விளக்குகிறார். பிரபஞ்ச அளவிலான இயக்கம்தான் சக்தி. அணுவுக்குள் உயிர்களுக்குள்ளும் உற்றெடுத்துப் பெருகும் இயக்கமே சக்தி என்று பாரதியிடம் கு..ரா கண்ட சக்தித் தத்துவத்தை செல்லப்பா விளக்குகிறார். கு..ரா.வும் செல்லப்பாவும் இறை நம்பிக்கை இல்லாதவர்களல்ல. சக்தி என்பதை வெளிப்படையாக இறை என்றோ பிரம்மம் என்றோ கு..ரா. குறிப்பிடவில்லை. பாரதி சக்தி வழிபாட்டினன் என்பது உண்மைதான். என்றாலும், அத்வைதம் அவருக்கு உடன்பாடான தத்துவம்தான்.

அணுவுக்குள்ளும் அண்டத்துக்குள்ளூம் உயிர்களுக்குள்ளும் செயல்படுவதாகிய இயக்கத்தைப் பிரபஞ்ச இயக்கமெனக் காணும் பொழுது இங்கு அத்வைதமும் சக்தியும் வேறுபட்டனவாகத் தோன்றவில்லை. செல்லப்பாவின் கருத்தின்படி கவிஞனும், பக்தனும் வேறானவர்கள். ஆழ்ந்து பார்த்தால் கவிஞனும் ஒருவகையில் பக்தன் தானென்பதைப் புரிந்து கொள்ளலாம். தாகூர் தனது சமயத்தைக் கவிஞனின் சமயம் என்று கூறியிருப்பதை வேறு எப்படி விளக்க முடியும். செல்லி பிரபஞ்சத்திற்குள் பேரான்மாவின் இயக்கத்தைக் காண்கிறார். வேர்ட்ஸ்வொர்த்தும் இயற்கையினுள் இறைமையைக் காண்கிறார். எல்லாவற்றினுள்ளூம் இறைமையைக் காண்பது என்பது இயக்கத்தைக் காண்பதாகவும் இருக்க முடியும். இந்த இடத்தில் சமயவாதியும் மதச்சார்பற்றவனும் முரண்படுவதற்கு அதிக வாய்ப்பில்லை. இருவருக்கிடையில் உள்ள வேறுபாடு மிக மிக நுட்பமானது என்பதிலும் ஐயமில்லை.

சிட்டி அவர்களைப் பொறுத்தவரை, செல்லப்பா கூறுவது போல கவிதைக்கு அழுத்தம் தந்து பாரதியை மதிப்பிடுகிறார். பாரதியின் குழந்தை பற்றிய கவிதைகளையும், காதல் பற்றிய கவிதைகளையும் எடுத்துச் சொல்கிறார். விவரித்துக் கொண்டே செல்லும்பொழுது பாரதியின் கவித்துவத்திற்குள் இறங்குகிறார். குழந்தைமை என்பது மனிதனின் முதற்பருவம் என்ற போதிலும், குழந்தைப் பருவம் மனிதனுக்குள் ஒரு வியப்புணர்வாய்க் காலம் முழுவதும் நிலைபெறுவதைச் சிட்டி காண்கிறார். பழமை என்ற பதிவை நீக்கி உலகத்தையும் வாழ்வையும் என்றும் புதியதாய் அழகியதாய்க் காணும் பேருணர்வில் கவித்துவத்தைக் காண்கிறார் சிட்டி. ஆண்டர்ஸன் முதலியவர்களின் தேவதைக் கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமே உரிய கதைகள் அல்ல. இவை மனிதர் அனைவருக்கும் உரிய கதைகள் அல்லது கவிதைகள்.

காதல் பற்றி பாரதியின் கவிதைகளை விவரிக்கும் சிட்டி பாரதியின் காதல் கவிதைகளின் உச்சம் என "யோகம்" கவிதையைக் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் காதலனும், காதலியும் ஒன்றாகிவிடுவதைச் சொல்லுகிறார். நான் நீ என்பன அற்று வீழ்ந்து விடுகின்றன. இந்த இடத்தில் சிட்டி பொருளும் சக்தியும் ஒன்றே என்று விஞ்ஞானத் தத்துவம் பற்றிப் பேசுகிறார். செல்லியின் காதல் தத்துவம் பற்றிச் சொல்லுகிறார். பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிப் பிரபஞ்சத்தை ஒன்றாக இணைக்கிறது காதல். இப்பொழுது நாம் சொல்லலாம். கவிதை என்று தொடங்கி தத்துவத்தின் உச்சத்தை அடைகிறோம். வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் அன்பு அல்லது காதல் இணைக்கிறது. இத்தகைய தரிசனத்தில் பிறப்பவன் மகாகவி.

சேக்ஸ்பியர் நாடகங்களைச் செய்தார். பாரதி நாடகம் எதுவும் எழுதவில்லை என்றுதான் நம் முதற்பார்வைக்குத் தோன்றுகிறது. சிட்டியும் இப்படித்தான் தொடங்குகிறார். காட்சி முதலிய வசன கவிதைகளில் பாரதி ஒரு நாடகத்தை எழுதிக் காட்டுகிறார். பாஞ்சாலி சபதம் ஆற்றல் மிகுந்த ஒரு நாடகம். குயில் பாட்டும் ஒரு நாடகம்தான். கண்ணனை அரசனென்றும், தாய் என்றும், தந்தையென்றும், தோழனென்றும் சீடனென்றும், காதலி என்றும், குழந்தையென்றும் பாரதி பல கோணங்களில் பாடும்பொழுது ஒரு அற்புத நாடகம் நம் கண்களில் விரிகிறது. இன்னும் ஆழ்ந்து செல்லும்பொழுது வாழ்க்கையே, வரலாறே, உலகமே, பிரபஞ்சமே ஒரு நாடகமாகி விடுகின்றது. இந்நாடகத்திற்குள் நாம் இருக்கிறோம். இயங்குகிறோம். குயிலாகி நாம் பாடுகிறோம். பாஞ்சாலியாகிக் கொந்தளிக்கிறோம். சகுனியாகிச் சூதாடுகிறோம். சேக்ஸ்பியரும் மனித நாடகத்தைத் தான் சித்தரிக்கிறார். நாம் �கேம்லெட்டாக இருக்கிறோம். மேக்பெத்தாக, லியர் அரசனாக இருக்கிறோம். சிட்டி தரும் விளக்கத்தை இவ்வாறு நமக்குள் வைத்தும், விரித்தும் பார்க்கலாம். இத்தகைய அண்டம் தழுவிய விரிந்த பார்வையைத் தனக்குள் கொண்டவன் மகாகவி என்பதில் ஐயமில்லை.

பாரதியின் தனிப்பாடல்கள் என்று குறிப்பிடத்தக்க சில பாடல்களில் மகாகவி என்பவனின் பேருணர்வும் பெருங்காட்சியும் வெளிப்பட்டு இருப்பதைப் பலரும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். பாரதியின் ஊழிக்கூத்து என்ற கவிதையை அனைவரும் குறிப்பிடுகின்றனர். செல்லப்பா இந்தக் கவிதையை குறிப்பிட்டுச் சிறப்பாக விளக்குகிறார். இப்பாடலில் இடியும் மழையும் உலகத்தைப் பிரளயமாய் மாற்றும்பொழுது மாபெரும் அழிவுச்சக்தி செயல்படுவதை நாம் பார்க்கிறோம். இந்த அழிவுச் சக்தியே உலகத்தை ஆக்கும் சக்தியாகவும் இருக்கிறது. வெறிகொண்ட காளி நடனமாடுகிறாள். வெறியின் உச்ச அளவில் அதுவே ஆனந்த நடனமாகிறது. காளி தன் வெறியில் தணிகிறாள். இரண்டு எதிர் முரண்கள் கூர்மையாக மோதி அப்புறம் இணைந்து புதியது பொலிகிறது. இது ஒரு பெரும் காட்சி. மகா கவிஞனுக்குரிய காட்சி.

கு..ரா., சிட்டி ஆகியவர்களைக் காட்டிலும் நவீனத்துவம் என்னும் சொல காலப் பார்வைக்கு நெருக்கமாக வருகிறார் செல்லப்பா. எல்லாவற்றையும் குறிகளாய்ப் பாரதிக்குள் காண்கிறார் செல்லப்பா. பாஞ்சாலி, பாரதத்தாயின் குறியீடு. குயில் காதலின் குறியீடு. கவிதையின் குறியீடு. ஆன்மாவின் குறியீடு. கண்ணன் என்பது ஒற்றைக் குறியீடு அல்ல. கண்ணனை அர்த்தப்படுத்தும் பொழுது பல குறிகளில் அர்த்தப்படுகிறான், இவ்வாறு குறியீடு என்ற முறையில் அர்த்தப்படுத்துவது நம் மரபுக்கு புதியது அல்ல.

கண்ணன் பாட்டு பற்றி சிட்டி அவர்கள் ஓர் உண்மையைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். கண்ணன் மாதிரி ஒரு படிமம் மேற்கத்திய உலகுக்குக் கிடைக்கவில்லை. கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை. நம்மிடமிருந்து ஒரு பொருளைத் தட்டிப் பறித்து உயர்ந்த இடத்தில் அதை வைத்து, உயரங்களைத் தொட நம்மைத் தூண்டுகிறான். பாரதியின் கண்ணன் ஆழ்வார் பாடல்களில் நமக்குத் தெரிகிற கண்ணன்தானா என்று கேட்டு, அல்ல என்கிறார் சிட்டி. இவன் நம் காலத்து அனுபவங்களின் வழியே நம்மை நெருங்கியிருக்கிற கண்ணன். இவன் நமக்கு அரசன் மட்டுமல்ல; குரு அல்லது தந்தை மட்டுமல்ல; இவன் நமக்குத் தாய், தோழன், சீடன். இவன் நமக்குக் காதலி. இத்தகைய காட்சிகளின் வழியே நமக்கு பக்தியின் மூலம் அல்லாமல் வாழ்வியல் அனுபவங்கள் வழியே நமக்குள் வருபவன் இந்தக் கண்ணன். இவன் நமக்குள் இருப்பவன். இவன் நம் உயிர்ச்சக்தி. இவனை நமக்குள் ஓயாமல் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.

மேற்குலகக் கவிதைக்கும் கிழக்குலகக் கவிதைக்கும் இடையிலான வேறுபாடு குறித்துச் சிட்டி சொல்கிறார். சீனக் கவிதை மற்றும் அரபுக் கவிதைகளின் தனித்தன்மை பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதியின் மனோதர்மம் பற்றிச் சிறப்பித்துச் சொல்கிறார். இயற்கையை வெளியில் வைத்து பாரதி கவிதை செய்யவில்லை. இயற்கையின் வழியே தன்னை வெளிப்படுத்துகிறார் பாரதி. இயற்கையோடு பாரதி இனைந்திருக்கிறார் என்றெல்லாம் சிட்டி விளக்குகிறார்.

(
தொடரும்...)

No comments:

Post a Comment