Sunday, October 16, 2011

திலகபாமா கவிதைகள்:


எடுக்கவோ? கோர்க்கவோ?
வானில் நட்சத்திரங்களாய்
என் மனச்சிதறல்கள்
எடுத்துக் கோர்க்க எண்ணி
ஊசி நூல் எடுத்து வராதே
குத்தல்களால்
கோர்க்கப்படுவதை விட
சிதறிக் கிடப்பதே
சௌகரியமாய்
நார் எடுத்து என்
நரம்பு தெறிக்க கட்டி
கழுத்து நெறிக்கப்பட்டுன்
கழுத்துக்கு மாலையாவதை விட
உதிரியாய் இருப்பதே
உள்ளத்துக் கினியதாய்
எடுக்கவோ கோர்க்கவோ
எனை செய்ய வேண்டாம்
சிதறிக் கிடப்பதே
சீதனமாய்
உதிரியாய் இருப்பதே
உண்மையாய்
இயற்கையாய் இருளோடு
மின்ன விட்டு விடு.
     ----*^*---
நான்.... சுதந்திரம்
அலையாய் என்னுள் மாற
நான் குளமல்ல, அருவி
சிலையாய் எனைச் செதுக்க
நான் கல்லல்ல, சுயம்பு
மாலையாய் எனைச்சூட
நான் பூவல்ல, விண்மீன்
நிழலாய் என்னுள் ஒதுங்க
நான் மரமல்ல, சூரியன்
நினைத்தவுடன் கட்டிக்கொள்ள
நான் சேலையல்ல, தாலி
தொடரவும் தீண்டவும் உருமாற
நான் மேகமல்ல, வானம்
ஆசைப்பட்டவுடன் அணிந்து கொள்ள
சேராவிட்டாலும் திணித்துக் கொள்ள
உன் விரல் மோதிரமல்ல என் ஆசைகள்
வைத்துப் பூட்டவும்
வசதிப்பட்டால் செலவழிக்கவும்
நான் காந்தி சிரிக்கும் காகிதமல்ல, கன்னி
அள்ளி முடியவும்
அவிழ்த்துப் போடவும்
நான் உன் சாயம் போன மயிரல்ல, மனம்
என் சுதந்திரம் நீ ஒதுக்கும்
பட்ஜெட் தொகையல்ல
உன்னிடமிருந்து நான் பெற
சிகரம் ஏறவும், சிரித்து மகிழவும்
உன்னிடம் வேண்டுவது சுதந்திரமல்ல, காதல்.
     ----*^*---
எனக்குள்ளூம்...!
கடும் வறட்சி
காவிரி நீர்
அரசியல் மாற்றம்
அந்நிய நாட்டின்
பொருளாதாரத் தடை
சலனம் ஏதுமின்றி
சந்தோசமாயிருக்கிறேனென
எண்ணியிருக்கும் அம்மாவே
எய்ட்ஸ் பயம் எனக்குள்ளும்
எரிமலையாய் எரிந்தபடியே

No comments:

Post a Comment