Sunday, October 16, 2011

பாரதி, மகாகவி: வரலாறு -3

கு..ரா, சிட்டி, செல்லப்பா ஆகியவர்கள் பாரதியை மகாகவி என நிலைநிறுத்துவதற்கு முன் வைத்த காரணங்களை ஒரு மீள்பார்வை என்ற முறையில் இங்கு தொகுத்துக் கொள்ளலாம். கு..ரா.வுக்குப் பெண்ணுரிமை என்பதில் ஆர்வம் உண்டு. அரவிந்தர் பற்றி அவர் எழுதிய சிறு நூலின் மூலம், அவரது ஆன்மீக ஈடுபாட்டை நாம் அறியமுடியும். பாரதிக்குள் கு..ரா கண்ட சக்தித் தத்துவத்தைக் கு..ராவின் ஆன்மீக ஈடுபாட்டின் பகுதியாக நான் காண முடியும். பாரதிக்குள் மேலும் விரிந்து செல்லும் தத்துவம் பற்றிய விரிவான பார்வையின் மீது கு..ராவின் கவனம் செல்லவில்லை; பெரும் கவிஞர் எனப் பாரதியை நிலைநிறுத்துவதற்கு, பாரதியின் தத்துவப் பார்வைக்குள் ஆழ்ந்து செல்ல முடியும். பெண்மை பற்றிய பாரதியின் பார்வையும் நமக்குக் கூடுதலாகப் பயன்படும். சிட்டி அவர்களைப் பொறுத்தவரை, பாரதியின் கவிதை பற்றி மட்டுமே கருத்துச் செலுத்துகிறார். கவிதை என்பது இலக்கியத்தின் ஒரு பகுதி. இலக்கியம் என்பது நீட்சி. தத்துவத்தின் உள்ளும் வரலாற்றின் உள்ளும் விரிந்து செல்கிறது. பாரதிக்குள் செயல்பட்ட கவிதை அல்லது இலக்கியம் என்பது நெடுங்கால இந்தியத் தத்துவத்தோடும், வரலாற்றோடும் நெருக்கமான தொடர்புடையது. இந்த உறவைப் பின்னணியாக வைத்துத்தான் பாரதி கவிதையின் பன்முகப் பரிமாணங்களுக்குள், நம் ஆய்வு தொடர முடியும். இம்முறையில்தான் பாரதியின் மகாகவி தகுதி உறுதிப்படும். செல்லப்பா அவர்களைப் பொறுத்தவரை, மேற்கிலிருந்து நமக்கு வந்த நவீனத்துவம் என்பதல் கலை இயல் பற்றிக் கூடுதலாகச் சிந்தித்தார். பாரதியின் இலக்கியம் பற்றிய ஆய்வில் குறியீடு என்ற அணுகுமுறையைச் செல்லப்பா பயன்படுத்தியதை நாம் பெரிதும் வரவேற்கலாம். செல்லப்பாவிடம் பாரதி கவிதைக்குள் குறியீடு என்ற கட்டுதல் இருக்கின்றதே தவிர இதன் விரிவு இல்லை.

கு..ரா. முதலியவர்கள் பாரதி பற்றிய ஆய்வின் போது, பாரதியிடம் ஏதேனும் குறை கண்டனரா என்ற கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டு பார்க்கலாம். .வே.சு. பாரதியின் கண்ணன் பாட்டிற்கு எழுதிய முன்னுரையில் கண்ணன் பாட்டின் சில பகுதிகளில் விரசம் தொனிப்பதைக் குறித்திருந்தார். கு..ரா. இதை ஏற்கவில்லை. சிட்டி அவர்கள் கூட வள்ளிப்பாட்டில் இவ்வகைக் குறை கண்டார். அங்கும் இங்குமாகச் சில வரிகளைத்தான் இவர்கள் சுட்டிக்காட்ட முடியும். தெய்வங்களுக்கு இடையில் ஆன காதலைக் குறித்து எழுதும்பொழுதே விரசம் வந்துவிடக்கூடாது என்கிறார்கள். மனிதக் காதலில் இந்த வகைக் குறை வருவதை நம்மால் மறுக்க முடியுமா என்று நாம் கூட கேட்டுக் கொள்ளலாம். இது எப்படி இருந்த போதிலும் பாரதியிடம் இவர்கள் காணும் இந்தக் குறை பாரதியின் கவிதை தொகுப்பு என்பதன் ஓரத்தில் தெரியும் குறை. பாரதி கவிதையின் மையத்தில் இவர்கள் குறை எதனையும் காணவில்லை என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பாரதி கவிதையின் உபாசகர்கள் என்றுகூட இவர்களை நாம் குறிப்பிடுவதில் தவறில்லை. பாரதி கவிதை அந்த அளவிற்கு இவர்களைக் கவர்ந்திருக்கிறது. நம்மையும் பாரதி கவர்ந்திருக்கிறார். வரலாற்றுப் போக்கில் இந்தக் கவர்ச்சி கூடி வந்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கு..ரா. முதலியவர்கள் எழுப்பிய மேலும் சில கேள்விகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு உரிய இடம் எது? செல்லப்பா அழுத்தமாகக் கேட்கிறார். பாரதிக்கு உரிய இடத்தை நிர்ணயிப்பதன் மூலமாகத்தான் தமிழில் திறனாய்வு வளர முடியும். பாரதியே கூட கம்பருக்கும், இளங்கோவுக்கும், வள்ளுவருக்கும் நிகரான கவிஞர் இல்லை என்று பாடியிருக்கிறார். கம்பர் முதலிய தமிழ்ப் பெரும் கவிஞர்கள் வரிசையில் பாரதியைச் சேர்ப்பதில் கு..ரா. முதலியவர்களுக்கு விருப்பம் உண்டு. இப்பொழுது நமக்குள் எழும் கேள்வி, கம்பர் முதலியவர்களை மட்டுமல்லாமல் பாரதியையும் பெரும் கவிஞர் என்று மதிப்பீடு செய்வதற்குப் பொதுவான வரையறைகள் வகுக்க முடியுமா? அல்லது மகாகவி எனப் பாரதியை மதிப்பீடு செய்வதற்கு கு..ரா. முதலியவர்கள் எடுத்துக் கொண்ட வரையறைகளைக் கம்பர் முதலியவர்களுக்கும் நாம் பயன்படுத்த முடியுமா? இன்னும் ஒரு கேள்வி. தமிழில் திறனாய்வு ஓர் அளவுக்கேனும் வளர்ந்திருக்கின்ற இந்தச் சூழலில் பாரதியை மகாகவி என மதிப்பீடு செய்வதற்கு நான் முன் வைக்கின்ற வரையறைகள் எவை?

பாரதி மகாகவி என்ற ஆய்வு 1937ல் முடிவு பெற்றதாக நாம் கருதுவதற்கு இடம் உண்டு என்ற போதிலும், கு..ரா. முதலியவர்கள் முன்வைத்த வரையறைகள் மற்றும் மதிப்பீடுகள் பற்றி புதிய பரிசீலனைகள் நடைபெறத்தான் செய்தன. அன்றியும் பாரதி மகாகவி என மதிப்பீடு செய்வதற்குப் புதிய வரையறைகளும் கண்டறியப்பட்டன. இம்முறையில் மேலும் ஓர் ஆய்வு நூல் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேராசிரியர் சிவத்தம்பியும், .மார்க்சும் இணைந்து எழுதிய 'பாரதி - மறைவு முதல் மகாகவி வரை' என்ற நூல் (1982) பாரதி மகாகவி என்ற ஆய்வில் பெரிதும் குறிப்பிடத்தக்க ஓர் ஆய்வு. 1920 முதல் 1949 வரையிலான கால அளவில் பாரதி பற்றிய மதிப்பீடுகள் எவ்வாறு உருவாயின என்ற முறையில் ஏராளமான தகவல்களுடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் ஆய்வு நூல் என்பதற்கான ஒரு முன்மாதிரி என்ற தகுதி இந்த நூலுக்கு உண்டு. இந்த ஆய்வின் முன் வைக்கப்படும் சில கருத்துகள் மற்றும் சில முடிவுகளை இங்கு தொகுத்துக் கொள்ளலாம்.

1.
பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவரைக் 'கவி சிரேஷ்டர்' என்றும் 'அவதார புருஷர்' என்றும் சிலர் கூறினர். பாரதி எட்டையபுரத்து அரசருக்கு எழுதிய சீட்டுக் கவியில் "கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். பாஞ்சாலி சபதம் முன்னுரையில் எளிய பதங்கள் முதலிய சேர்க்கையோடு தமிழில் காவியம் செய்து தருவோன், தமிழுக்குப் புத்துயிர் தருபவன் என்று குறிப்பிட்டிருந்ததை, நம்மைப் பொறுத்த அளவில் பாரதி தன்னைப் பற்றிய மதிப்பீடாகவே கருதலாம். எனினும் மணிக்கொடி தோற்றம் பெறும்வரை தேசிய விடுதலையை உள்ளடக்கிய அரசியல் களத்தில் அல்லாமல் பிற களங்களில் பாரதிக்கு செல்வாக்கு ஏற்படவில்லை.

2.
மணிக்கொடி தமிழில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது என்பது இன்று பலரும் ஒப்புக்கொள்ளூம் கருத்து. மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும், ஆனந்தவிகடன் சார்ந்த கல்கி முதலிய எழுத்தாளர்களுக்குமிடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவின என்பது பற்றி இந்த நூல் ஒரு புதிய புரிதலை நமக்கு முன் வைக்கிறது. தமிழில் ஆக்க இலக்கியத்தின் மூலம் படைப்பிலக்கியத்தின் மூலம் தமிழில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்கள் மணிக்கொடியினர், தமிழுக்கு மிகப்புதியது என அன்று தென்பட்ட ஆக்க இலக்கிய முயற்சியை முன்எடுத்துச் செல்லும் ஒரு முறையாகப் பாரதியைப் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் முன் வைத்தனர். பாரதிக்கு மகாகவி என்னும் இலக்கிய பீடத்தை உறுதிப்படுத்துவதன் வாயிலாகப் பாரதியின் வழியே ஏற்பட்ட புதிய ஆக்க இலக்கிய முயற்சியை அவர்கள் மெய்ப்பிக்கப் போராடினர். இவர்களுக்கு எதிரான முயற்சியில் இராசாசி, டி.கே.சி. ஆகியவர்களையும், கல்கி தன்னோடு இணைத்துக் கொண்டார். இராசாசி காந்தியிடம் பாரதியை அறிமுகப்படுத்தும்பொழுது தமிழின் மகாகவி என அறிமுகப்படுத்தவில்லை. பாரதி இறந்த செய்தியைக் காந்தி அறியார். டி.கே.சி. பாரதியை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இவ்வாறு மேலும் பல விவரங்களை முன்வைக்கும் ஆய்வாளர்கள் தம் முடிவை இவ்வாறு தெரிவிக்கின்றார்கள். மணிக்கொடியினர் தான் தமிழ் மக்கள் மத்தியில் இலக்கிய உணர்வை முதன்முறையாகத் தூண்டினர். இந்தச் சூழலில்தான் பாரதியின் இலக்கியத் தகுதி முதன்முறையாக முன்வைக்கப்பட்டது. அரசியல் களத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரதி, இப்பொழுது இலக்கியக் களத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கினார். கு..ரா, சிட்டி முதலியவர்களின் கட்டுரைகள் வெளியானது இந்தச் சூழலில்தான்.

3.
சமத்துவம் முதலியவை பற்றிய சமூக உணர்வு சார்ந்த பாரதியின் கருத்துகளை மணிக்கொடியினர் பாராட்டவில்லை. மணிக்கொடியினருக்கு அழுத்தமான சமூக உணர்வு இருந்தது என்று சொல்ல முடியாது. பாரதியிடம் இருந்த சமூக உணர்வை .ரா. கண்டறிந்து பாராட்டினார். சாதி மற்றும் பெண்ணடிமை ஆகியவற்றை ஒழிப்பதில் பாரதி கொண்டிருந்த தீவிரத்தைப் பாரதிதாசன் தன் 'கவிதா மண்டலத்தில்' எடுத்துரைத்தார். தன்மான இயக்கத்தின் தொடக்க காலத்தில் பாரதியின் சமூகக் கருத்துகள் பாராட்டப்பட்டன. 1937க்குப் பிறகு ஜீவாதான் பாரதியின் சமூகக் கருத்துகளுக்கு அழுத்தம் தந்து பேசினார். 'பிரமதேவன் கலை இங்கு நீரே' என்று பாரதி தொழிலாளர்களைப் பற்றிப் பேசினார். ஞானம் முழுவதற்கும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என நீதி நூல் எதுவும் இல்லை என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் தன் கருத்தை வெளிப்படுத்தினார். 'எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என்றும் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றும் பாரதி பாடினார். ரஷ்யாவில் எழுந்த யுகப்புரட்சியை வரவேற்றுப் பாடினார். இவ்வாறெல்லாம் பாரதியின் சமூகக் கருத்துகளுக்கு அழுத்தம் தந்து பேசியவர் ஜீவா. ஜீவாவின் மார்க்சியம் சார்ந்த கருத்துகளை பி.ஸ்ரீ. முதலியவர்கள் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் மறுத்து எழுதினாலும், மக்கள் மத்தியில் பாரதி பற்றிய ஜீவாவின் மதிப்பீடு செல்வாக்குப் பெற்றது. முதல் முறை மக்களால் பாரதி மகாகவி என ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பது ஆய்வாளர்களின் முடிவு.

4.
பாரதியை வேதாந்த கவி என ராஜாஜி மதிப்பிட்டார். அரசியல் மற்றும் இலக்கியக் களத்தில் பாரதியின் பங்களிப்பை ராஜாஜியால் மதிக்க இயலவில்லை. ஆகவே வேதாந்தக் கவி என்று கருதினார் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பாரதியின் படைப்புத் திறனுக்கு முதன்மை தந்து சிதம்பர சுப்ரமணியம் எழுதினார். ஆரிய திராவிடப் போராட்டம் முன்னிலைக்கு வராத காலத்தில் பாரதியின் ஆரியச் சார்பைக் குற்றம் சொல்வது தவறு என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். இப்படிச் சில கருத்துக்களையும் கட்டுரையாளர் தொகுத்துள்ளனர்.

5.
பாரதியைத் தமிழ்ப்புலவர்கள் ஏற்ற வரலாறு பற்றியும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தொடக்கக் காலத்திலேயே சோமசுந்தர பாரதியாரும், விபுலானந்தரும் பாரதி பற்றி உயர்வான மதிப்பீடு கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர தமிழ்ப் புலவர்கள் கூட்டம் பாரதியைப் பொருட்படுத்தவில்லை. .வே.சா. பற்றிப் பாரதி எழுதிய கவிதை நமக்கு நினைவிருக்கும். தமிழ் வாழும் காலமெல்லாம் உன் புகழ் நிலைபெறும் என்று பாரதி தன் இளமைக் காலத்திலேயே .வே.சா. வாழ்த்துப் பாடியிருந்தார். ஆனால் .வே.சா. பாரதி இறந்த பிறகு கூட அவரைக் கண்டு கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்கள் என்று சிறப்பித்துக் கூறத்தக்கவர்களில் வையாபுரி அவர்கள்தான் பாரதியின் மேன்மையை உறுதியாகத் தெரிவித்தார். நம் காலத்தில் பாரதியை மறுக்கும் தமிழறிஞர்கள் எவருமில்லை. பாரதியின் தமிழைப் புலவர்கள் ஏற்க நெடுங்காலம் ஆயிற்று.

(
தொடரும்...)

No comments:

Post a Comment