Sunday, October 16, 2011

பாரதி, மகாகவி: வரலாறு -4

பாரதி மகாகவி ஆன வரலாற்றை மேலும் பல ஆதாரங்களிலிருந்து இந்த ஆய்வாளர்கள் விவரிக்கின்றார்கள். கு..ரா முதலியவர்கள் தந்த வரையறைகளை இவர்கள் மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். பாரதிக்குள் கவிதையும், அரசியலும், தத்துவமும், தமிழ்ப்புலமையும் இணைந்திருந்தன. பாரதியிடம் படைப்புத்திறன் மேலோங்கி இருந்தது. இவை அனைத்தும் பாரதிக்குள் ஒருங்கிணைந்திருந்தாலும், அடுத்து அடுத்து வரும் கால நிலைகளில்தான் இவை ஒன்றையடுத்து மற்றதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. தொடக்கத்தில் தேசிய கவி எனப் பாரதி மதிக்கப்பட்டார். மணிக்கொடியினர் மூலம்தான் பாரதியின் இலக்கிய மேன்மை உறுதிப்படுத்தப்பட்டது. .ரா. பாரதிதாசன் ஆகியவர்கள் பாரதி கவிதையில் தென்படும் சமூக உணர்வுக்கு அழுத்தம் தந்த போதிலும் அரசியல் மற்றும் இலக்கியக் களத்தினுள் ஜீவா நுழைந்த பிறகுதான் பாரதியின் மகாகவி பெயருக்குக் கூடுதலான தகுதி ஏற்பட்டது. சிட்டி முதலியவர்கள் பாரதிக்குள் கண்டறியாத பாரதியின் சமூக உணர்வு என்ற தகுதியை ஜீவாவும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களும்தான் பாரதியின் கவிதையில் கண்டறிந்தார்கள்.

பாரதி ஒரு பெருங்கவிஞராகத் தோற்றம் பெற்றார். அவருக்குள் இலக்கியம், அரசியல், தத்துவம், படைப்புத்திறன் முதலியவை எவ்வாறு ஒருங்கிணைந்திருந்தன என்பதைச் சிட்டி முதலியவர்களும், சிவத்தம்பி முதலியவர்களூம் விளக்கவில்லை. ஆனால் ஒரு பெருங்கவிஞரின் தோற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான சமூகச் சூழல் குறித்த ஆய்வைச் சிவத்தம்பியும் .மார்க்சும் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள். இலக்கியம் பற்றிய சமூகவியல் ஆய்வு என்று இதனைக் குறிப்பிடுவது பொருந்தும். சங்க இலக்கியம் இடைக்காலத்தில் பொருட்படுத்தப்படவில்லை. திருவள்ளுவருக்கும், இளங்கோ அடிகளுக்கும் இதே கதி ஏற்பட்டது இருபதாம் நூற்றாண்டில் இந்த இலக்கியங்கள் முன்னணிக்கு வந்திருக்கின்றன. இலக்கிய வரலாற்றில் இப்படி எத்தனையோ நிலவரங்கள் உள்ளன. இலக்கியத்தின் சமூகவியல் பற்றிய ஆய்வின் மூலம்தான் இலக்கியம் பெறும் மதிப்பீட்டு மாற்றங்களை, ஏற்றத்தாழ்வுகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

1937
இல் பாரதி பெருங்கவிஞரென ஏற்றுக் கொள்ளப்பட்டார். விடுதலை இயக்கத்தில் ஆர்வமுடையவர்கள் முதலிலும், பிறகு தமிழன் மறுமலர்ச்சி சார்ந்த படைப்பாளிகளூம் பாரதியை ஏற்றுக் கொண்டனர். தமிழில் மரபு சார்ந்த இலக்கியத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக படைப்பிலக்கிய முயற்சியில் மணிக்கொடியினர் ஈடுபட்டனர். புலவர்கள் இந்தப் புதிய போக்கைப் புரிந்து கொள்ளவில்லை. ஏற்கவுமில்லை. இந்நிலையில் பாரதியின் கவிதையை, பாரதி கவிதையின் புதுமையை, பாரதி கவிதையின் படைப்புத் திறனை முன்னிருத்திப் பாரதியை மகாகவி என மெய்ப்பிப்பதன் மூலம் தங்களின் படைப்பிலக்கிய ஆளுமையை மெய்ப்பிக்க மணிக்கொடியினர் முனைந்தனர் என்பதைச் சிவத்தம்பியும், மார்க்சும் சிறப்பாக விளக்கியுள்ளனர். தம்மை நிலைநிறுத்திக் கொள்ள பாரதியை இவர்கள் தூக்கிப் பிடித்தார்கள். இதனால் பாரதிக்கு மட்டுமல்லாமல் மணிக்கொடியினருக்கும் உரிய தகுதி கிட்டியது.

இதன்மூலம் தெரிய வரும் இன்னொரு உண்மை பற்றி இங்கு நாம் குறிப்பிட வேண்டும். புலவர்கள் பார்வையில் இலக்கியத்திற்குத் தனி வாழ்வு இல்லை. சமயத்தின் ஒரு பகுதிதான் இலக்கியம். புராணங்கள் இலக்கியமாகப் பயிலப்பட்ட காலத்தில் இலக்கியத்தின் தனித்தன்மை மதிக்கப்படவில்லை. இலக்கியம் என்பதைக் கூடத் தமிழ்ப்புலவர்கள் அறியார். எதுகை, மோனை, யாப்பு, உயர்வு நவிற்சி முதலிய வடிவங்களில்தான் அவர்கள் கவிதையைக் கண்டனர். இறைவனைப் பற்றி அல்லது அரசனைப் பற்றிப் பாடுவதுதான் இலக்கியம். இலக்கியம் செய்யுள் வடிவில்தான் இருக்க வேண்டும். கற்பனை அழகு இலக்கியத்தில் முக்கியம். இவ்வாறு இலக்கியம் பற்றிக் கருத்துக் கொண்டிருந்த புலவர்கள் நிகழ்காலத்தோடு தொடர்பு கொண்டவர்களாக இல்லை. வாழ்வைத் தீர்மானிப்பவன் இறைவன். இத்தகையச் சூழலை மறுத்துத்தான் பாரதி செயல்பட்டார். பாரதிக்குள் இலக்கியம் புதுவடிவம் பெற்றது. இதை முதன்முறையாகப் புரிந்து கொண்டவர்கள் மணிக்கொடியினர். தொன்மையான இலக்கியங்கள்தான் உன்னத இலக்கியங்கள் என்னும் மரபுப் பார்வையை இவர்கள் மாற்ற முனைந்தனர். உரைநடையிலும் இலக்கியம் இயங்கும் என்று காட்டினர். சிறந்த படைப்புகள் பலவற்றைத் தந்ததன் மூலம் தமிழைப் புதுமைப்படுத்தினர். இப்பொழுது இலக்கியம்/இலக்கியத்தன்மை என்பதற்கும் புதுப்பொருள் தோன்றுகிறது.

இலக்கியத்தின் சமூகம் மற்றும் அரசியல் சார்பை மணிக்கொடியினர் காணவில்லை. இந்தக் கருத்துகளூக்கு கு..ரா. முதலியவர்களூம் அழுத்தம் தரவில்லை. தொடர்ந்து சமூக நிலவரங்கள் மாறிக்கொண்டிருந்தன. தேசவிடுதலை என்பதன் அரசியல் கூறுகளோடு பொருளியல் கூறுகளூம் முன்னுக்கு வந்தன. தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. போராட்டங்களூம் எழுந்தன. விடுதலை என்பது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உரியது என்ற கருத்து வலுப்பட்டது. பெண்ணுக்கும் விடுதல வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விடுதலை தேவை. இத்தகைய சூழலில் தன்மான இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் தோன்றுகின்றன. இத்தகைய சூழலில் பாரதி இவர்களுக்குக் கை கொடுக்கிறார். பாரதி கவிதைகள் மூலம் சமூக உணர்வை முன்னெடுத்துச் செல்வதும் மக்கள் மத்தியில் பரப்புவதும் மக்கள் ஏற்பதும் சாத்தியமாகிறது. மக்களின் மொழி நடையில் பாரதி கவிதைகள் அமைந்துள்ளன. மக்களுக்காகத்தான் பாரதி கவிதை இயற்றினார். புலவர்களுக்காக அவர் பாடவில்லை. இத்தகைய சூழலில் இலக்கியம் எளிமையும், புதுப்பொலிவும் பெறுகிறது.

இலக்கியத்தின் சமூகவியலை இவ்வாறு விளங்கிக் கொள்ளும்பொழுது சிவத்தம்பி, மார்க்சு ஆகிய ஆய்வாளர்களீன் கருத்தில் உள்ள புதுமையை நாம் ஏற்க முடியும். இவர்கள் நூலின் முன்னுரையிலும் இடையில் முன் வைத்த இன்னொரு கருத்துப் பற்றி இங்குக் குறிப்பிடலாம். தமிழிலக்கியப் பாரம்பரியம் பாரதிக்குள் எவ்வாறு வந்து சேர்ந்தது என்றும், பாரதியின் மூலம் தமிழிலக்கியப் பாரம்பரியம் பெற்ற 'புதியதான திசைதிருப்பம்' என்ன என்றும் இவர்கள் கேள்வி எழுப்பினர். இவை அடிப்படையான தீவிரமான கேள்விகள். இக்கேள்விகளுக்கு ஆய்வாளர்கள் பதில் தரவில்லை. இக்கேள்விக்குரிய விடை நோக்கி இயங்குவது நம் கடமை.

எத்தகைய வாழ்வியல் சூழலிலிருந்து பாரதி மகாகவியாய்ப் பிறப்பெடுத்தார் என்பது பற்றி இங்குச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டு இந்தியச் சூழலில் வாழ்ந்தவர் பாரதியார். இளம்வயதிலேயே சோமசுந்தர பாரதியார் கூறுகின்றபடி வரகவியாய்த் திகழ்ந்தார். தந்தையின் நவீனத் தொழிற்சாலை சிதைந்ததோடு, தந்தையும் இறந்தார். காசி வாழ்வு, சமக்கிருத அறிவை மட்டுமல்லாமல் அனைத்திந்தியத் தொடர்பையும் அவருக்குத் தந்தது. சென்னையில் பத்திரிகைத் தொழிலை விரும்பி மேற்கொண்டதன் விளைவாக, விடுதலை அரசியல் அவரை உள்வாங்கிக் கொண்டது. விவேகானந்தர், நிவேதிதா ஆகியவர்கள் மூலம் வேதங்களின் பொருளை சோசலிசம் என்றும் விடுதலை என்றும் அவர் புரிந்து கொண்டார். அரவிந்தர், .வே.சு, திலகர், ..சி முதலிய மேதைகள் மூலம் உலகளந்தவராகப் பாரதி தன்னை உருவாக்கிக் கொண்டார். அவர் பார்வைக்குள் சப்பானும், பெல்சியமும், �பிசித் தீவுகளும் பதிந்தன. மாபெரும் ரசியப் புரட்சியை வரவேற்றார். இந்தியாவிற்கும் புரட்சி தேவை என்றார். இந்திய அரசியலில் காந்தி நுழைந்த பொழுதே இந்திய அரசியலில் ஏற்படுத்தவிருக்கும் பெரும்வீச்சை உணர்ந்து பாடினார். இந்தியாவின் நெடுங்கால ஆன்மீக வாழ்வு அவரைத் தன்வயப்படுத்திக் கோண்டது. வறுமையின் எல்லைக்கோடு வரை அவர் பார்த்திருக்கிறார். இசுலாமியரோடும் தாழ்த்தப்பட்ட மக்களோடும் அவர் இணைந்திருந்தார். வாழ்வின் கனலை அவர் அனுபவித்தார். இந்தியச் சமூகம் தனக்குள் பதிந்து வைத்திருக்கிற தடைகளை அவர் தகர்த்துக் கொண்டார். இந்தியாவின் தொன்மைக்காலச் சிந்தனைகளுக்கும் நவீன காலச் சிந்தனைகளுக்குமிடையிலொரு அற்புதமான உறவு அவருக்குள் மலர்ந்தது. வேதங்களைப் புதுமை செய்தார். இந்தியாவுக்குத் தேவையான புதிய யுகத்தைக் கிருதயுகம் எனக் காண்பார். அவர் பார்வையில் கண்ணனும் ஏசுவும் நபியும் வேறு அல்லர். நந்தனும் ஒரு பார்ப்பான். சுரண்டலும் ஒடுக்குமுறையும் எந்த வடிவிலும் தேவை இல்லை. ஆங்கிலம் நம்மை அழிக்கும். பெண்ணடிமைத்தனம் வேண்டாம். அவர் பார்வையில் தாசுமகால் ஆரிய சம்பத்து. வேளாளரும் பறையரும் ஆரிய மக்கள். ஆரியரென்பது, மேன்மையரென்று அவருக்குப் பொருள்படும். அவருக்குள், ஒரு சித்தர் வாழ்ந்தார். அவர் ஏழைகளின் தோழர். இவ்வாறு இந்திய வரலாற்றீன் ஆக்கத்திறன்கள் அவருக்குள் ஒன்றிணைந்தன. வரலாற்றுக்குத் தன்னைத் திறந்து கொடுத்தார். ஆதிக்கத்தை உள்வாங்கிக் கொண்ட பார்ப்பனீயம் அவருக்குள் இல்லை. வரலாற்றுள் தன்னைக் கரைத்துக் கொண்ட நிலையில் எல்லாவகை ஆக்கத்திறன்களும் அவருக்குள் பொங்கி வழிந்தன. .ரா. கூறியபடி அரக்கரால் பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட உலகத்தை, திருமால் மீட்டெடுத்ததுபோல, பாரதி தமிழை மட்டுமா மீட்டெடுத்தார்? நவீன காலத்துக்கேற்ப வாழ்வை அவர் மீட்டெடுத்தார். பாரதி நமக்குத் தந்தது ஒரு புதிய சகாப்தம். தமிழ் இலக்கியத்திற்குள் ஒரு புதிய ஊழியை நமக்குரியதாகச் செய்ததன் மூலம் பாரதி நமக்கு மகாகவி.

வர்க்கங்களின் தோற்றத்தோடுதான் வரலாறு தோன்றுகிறது. வர்க்க ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் காலம் முழுவதும் சமூகம் முழுவதிலும் தனி உடைமை. அரசு ஆகியவற்றின் ஆதிக்கம் ஒருபுறமும் அடிமைத்தனம் இன்னொரு புறமும் நிலவுவது தவிர்க்க இயலாதது. சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிலவும் காலம் முழுவதிலும் வறுமை, நோய் நொடிகள் முதலிய எத்தனையோ தீமைகளால் மக்கள் அவலத்திற்கு உள்ளாகி வருந்துவதும் தவிர்க்க இயலாதது. இந்த நிலையில் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுகின்றனர். இத்தகைய போராட்டத்தின் மூலமே மக்கள் தமக்கான வாழ்வை மற்றும் விடுதலையைப் பெறுகின்றனர். மக்கள் வாழ்வை நாசமாக்கும் அழிவுச் சக்திகளூக்கெதிராக, மக்கள் தமக்குள் ஆக்கச் சக்தியைத் திரட்டிக் கொள்வதன் மூலமே வாழ்வில் புதிய ஒளியையும், பார்வையையும், ஆற்றல்களையும் பெறுகின்றனர். இந்தச் சூழல்தான் புதியதான தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் ஆக்கம் தருகிறது.

(
தொடரும்...)

No comments:

Post a Comment